வைபவங்களில் 150 பேர் பங்கேற்க அனுமதி – பயணக்கட்டுப்பாடும் நீக்கம்!
கொவிட் தொற்று பரவலை தடுப்பதற்காக அமுலிலுள்ள சுகாதார ஒழுங்கு விதிகளில் மேலும் தளர்வுகள் மேற்கொளப்பட்டுள்ளன.
இதற்கமைவாக 25 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள விதிகளின் கீழ் நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு 25 ஆம் திகதி நள்ளிரவுடன் நீக்கப்பட்டுள்ளது.
திருமண வைபவங்களின் போது மண்டபங்களின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது அதிகபட்சமாக 100 பேர் கலந்துகொள்ள முடியும்.
திறந்த இடங்களில் ஒழுங்கு செய்யப்படும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு பங்கேற்கலாம்.
எவ்வாறாயினும், திருமண நிகழ்வுகளில் மதுபானம் பயன்படுத்துவதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் ஒரேநேரத்தில் ஆகக் கூடுதலாக 75 பேருக்கு இருக்க முடியும். இது மூன்றில் ஒரு பகுதியாகும் திறந்தவெளி உணவகங்களை நடத்திச் செல்லவும் ஊக்குவிக்கப்படுகிறது.
அலுவலக கூட்டங்களை நடத்துவது தொடர்பாகவும் புதிய விதி அறிவிக்கபட்டுள்ளது. இதற்கமைவாக, இதுகுறித்த மண்டபம் அல்லது 1/3 இடத்தில் கூட்டத்தை நடத்தலாம். அதிகபட்சம் 150 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.