சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பாரிய மிதக்கும் சூரிய சக்தி பண்ணை

0 323

உலகெங்கும் மின்சாரத்துக்கான மாற்று ஏற்பாடு பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பூரில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் ஆகப்பெரிய சூரிய சக்தி பண்ணைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்பதும், நிலப் பற்றாக்குறை நிலவும் நாடுகளுக்கு ஏற்றதாகவும் சூரிய சக்தி உற்பத்தி திட்டங்கள் கருதப்படுகின்றன.

எனவே சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டில் இத்தகைய திட்டங்கள் பரவலாகச் செயல்படுத்தப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே சூரிய சக்தி உற்பத்தியை சிங்கப்பூர் அரசு ஊக்குவித்து வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையேயான ஜோகூர் நீரிணையில், கடல் மீது மிகப் பெரிய சூரிய சக்தி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

13,312 சூரிய விசைத் தகடுகளை இணைத்து அமைக்கப்பட்டுள்ள இந்த பண்ணை பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது.

அதாவது ஏழு கால்பந்து திடல்களுக்கு சமமான பரப்பளவில் இந்தப் பண்ணை அமைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மிதக்கும் சூரிய சக்திப் பண்ணையின் செயல்பாட்டுக்காக நாற்பது மாறு திசை மின்னோட்ட சாதனங்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிதவைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் சுமார் ஆறு மில்லியன் கிலோவாட் மணிநேர எரிசக்தியை இந்தப் பண்ணை மூலம் உற்பத்தி செய்ய முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதைவிட குறிப்பாக நான்காயிரம் டன் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கு இப்புதிய ஏற்பாடு உதவும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.