இராணுவத்திடமிருந்த பதினோரு ஏக்கர் காணிகள் விடுவிப்பு

0 209

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள இதுவரை இராணுவப் பயன்பாட்டில் இருந்த 11 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய ஆவணத்தினை இன்று முல்லைத்தீவு மாவட்ட படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிற பிலப்பிட்டிய உத்தியோக பூர்வமாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனிடம் கையளித்துள்ளார்

682ஆவது படைப்பிரிவு தலைமையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயக்காந் மற்றும் காணிக்கிளை அதிகாரிகள் கிராம சேவையாளர் மற்றும் 68 ஆவது படை அதிகாரிகள் ஆகியேர் கலந்து கொண்டுள்ளார்கள்.

யுத்தம் நிறைவடைந்து மக்கள் புதுக்குடியிருப்பில் மீள குடியமர்ந்த போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்ப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள சுமார் 19 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீள்குடியேறிய மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தபோதும் எந்தவித தீர்வுகளும் கிடைக்கப்பெறாத நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு மாசி மாதம் 03 ம் திகதி குறித்த பகுதியில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட 19 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு கோரி 49 குடும்பங்களை சேந்தவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.

போராட்டம் ஆரம்பித்து சுமார் ஒரு மாத காலத்தில் குறித்த காணிகளை மூன்று கட்டங்களாக விடுவிப்பதாக உறுதிமொழி வழங்கப்பட்டது. இருப்பினும் முதலாவது பகுதி காணிகள் விடுவிக்கும் வரை தாம் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்த மக்கள் குறித்த உறுதிமொழிகளுக்கமைய முதற்கட்டமாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட 7.75 ஏக்கர் காணி விடுவிப்போடு தொடர் போராட்டத்தை நிறுத்தினர்.

புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட 7.75 ஏக்கர் காணி விடுவிப்பை தொடர்ந்து மீதமுள்ள 29 பேரினது 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றிய பின்னர் மூன்று மாதத்திற்குள் விடுவிக்கப்படும் எனவும் மீதமுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீதமாக இருந்த காணிகளில் பதினோரு ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளதோடு இன்னும் ஒரு பகுதி காணி இராணுவத்தினரின் கட்டுப்பாடில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.