தொடர்ந்து அழுத்தங்களை கொடுப்போம் – பாராளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன்
வனவளத் திணைக்களத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பி்ரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செ.கயேந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவிற்கு இன்று விஜயம்செய்த அவர் கற்குளம்3,மற்றும் கற்குளம்4, மதுராநகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…
இந்தபகுதியில் உள்ள பெருமளவான குடும்பங்களிற்கு காணிகளிற்கான உறுதிபத்திரங்கள் வழங்கப்படவில்லை, வீட்டுத்திட்டத்திட்டங்கள் வழங்கபடவில்லை. அதிகமான மக்கள் தற்காலிக கொட்டில்களிலேயே வசித்துவருகின்றனர்.
உப குடும்பங்களும் தமது பிள்ளைகளுடன் சிறிய வீடுகளிலேயே ஒன்றாக வாழ்ந்துவருகின்றனர். குடிநீர் வசதி ஏற்ப்படுத்திக்கொடுக்கப்படவில்லை. மலசலகூடம் இல்லை.
அவர்கள் காலைக்கடன்களை கழிப்பதற்கு கூட பற்றைகளை பயன்படுத்தும் நிலையே காணப்படுகின்றது.
பல வருடங்களாக அவர்களுக்கு எந்தவித உதவிகளும் வழங்கப்படவில்லை.
அத்துடன் பற்றைகளாக இருக்கும் தமது காணிகளை துப்புரவாக்கி பயிர்செய்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நெருக்கடிகள் ஏற்ப்படுத்தப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனினும் அருகில் உள்ள சிங்கள கிராமங்களை சேர்ந்த மக்கள் சுதந்திரமாக அந்த பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த விடயங்கள் தீர்க்கப்படவேண்டும் உரிய அதிகாரிகள் இந்தவிடயத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மக்கள் நீண்டகாலமாக பராமரித்த காணிகளை வனவளத்திணைக்களம் சொந்தம் கொண்டாடுகின்றமை தொடர்பாக உரிய அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவரது கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறோம்.
பாராளுமன்றத்திலும் பேசியிருக்கிறோம் இதனை பேசி தீர்க்கமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த நிலமை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது எமது அழுத்தங்களை தொடர்ந்து பிரயோகித்துவருவோம் எனவும் தெரிவித்தார்.