2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கவுள்ள பெரும்தொகை நிதி.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கும் யோசனையில் கைச்சாத்திட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நிதி ஒதுக்கீட்டு யோசனையில் 2.3 ரில்லியன் டொலர்களுக்கான செலவு உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021,செப்டம்பர் 30இல் முடிவடையும் நிதியாண்டுக்காக, இலங்கையின் ஜனநாயகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி வழங்கப்படும் என அமெரிக்க யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு இந்த நிதியுதவிகள் கிடைப்பதற்கு அமெரிக்காவின் காங்கிரஸ் நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
அதில் மக்கள் சீனக் குடியரசின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறையாண்மையை உறுதிப்படுத்தவேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மனித உரிமைகளை மதிக்க மற்றும் நிலைநிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் பயனுள்ள மற்றும் நிலையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் சான்றுப்படுத்தினால் மாத்திரமே இந்த நிதியுதவிகள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் நிபந்தனைகளை விதித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை, குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பது, மக்கள் சீனக் குடியரசின் செல்வாக்கிற்கு எதிரான இறையாண்மையின் உறுதி மற்றும் இன மற்றும் மதக் குழுக்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டே நிதியுதவி வழங்கப்படும் என்று அமெரிக்க யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, காணாமல் போனவர்களைக் கண்டறிந்து அடையாளம் காணுதல் மற்றும் சித்திரவதை மற்றும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் மற்றும் சர்வதேச இராணுவ கல்வி மற்றும் பயிற்சிக்காக நிபந்தனைகளுடன் இலங்கைக்கு நிதியுதவிவழங்கப்படும் என்றும் அமெரிக்காவின் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.