வவுனியா சர்வதேச பாடசாலையில் தொற்று பரவும் அபாயம்! பெற்றோர் அச்சம்!!
வவுனியாவில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றுவதால் தமது பிள்ளைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள ஆங்கில மொழிமூல ‘அட்வன்டிஸ்’ சர்வதேச பாடசாலையில் கொழும்பு, நுவரெலியா மற்றும் நீர்கொழும்பு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஊடாக தங்கள் பிள்ளைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பெற்றNhர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா சுகாதாரப்பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா சுகாதாரப்பிரிவினர், முடக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்தும், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருந்தும் வருகைதரும் நபர்கள் தொடர்பாகவே விசேட கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தனர்.
வவுனியாவில் நேற்று முன்தினம் (07) பாசார் வீதி, தர்மலிங்கம் வீதி சுற்றி வளைக்கப்பட்டு 260 நபர்களுக்கு நடத்தப்பட்ட பிசி.ஆர் பரிசோதனை மூலம் 54 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு குறித்த பகுதிகள் மறு அறிவித்தல்வரை வவுனியா சுகாதாரப் பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப பெற்றோர் அச்சமடைந்துள்ளதுடன் சுகாதாரப்பிரிவினர் குறித்த பாடசாலையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு தொற்று அற்ற சூழலை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.