வவுனியா கொள்களத்திற்கு பொருத்தப்படுமா? சி.சி.ரி.வி கமரா..
வவுனியா சோயோ ஒழுங்கையில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மாடு வெட்டும் கொள்களத்திற்கு சி.சி.ரி.வி கமரா பொருத்தப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பல ஆண்டு காலமாக குறித்த கோரிக்கை பல தரப்பாலும் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை சி.சி.ரி.வி கமரா பொருத்தும் செயற்பாட்டில் நகரசபை அசமந்தமாக செயற்பட்டு வருகின்றது.
குறித்த கொள்களத்தில் 7 மாடுகளே வெட்டுவதற்கு அனுமதி உள்ளதாக கால்நடை வைத்திய அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் வவுனியா நகரசபையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக முன்னர் தெரிவித்திருந்தது.
எனினும் குறித்த கொள்களத்தில் அதிகளவான மாடுகள் வெட்டப்பட்டு வருவதுடன் திருட்டு போகும் மாடுகள் பலவும் வெட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே குறித்த பகுதிக்கு சி.சி.ரி.வி கமரா பொருத்தப்படும் பட்சத்திலேயே அங்கு தீருட்டுப்போகும் மாடுகள் வெட்டப்படுகின்றதா என்ற உண்மை கண்டறியப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிப்பதுடன் சுகாதார பரிசோதனைக்கு பின்னர்தான் மாடுகள் வெட்டப்படுகின்றதா என்ற உண்மையும் தெரியவரும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே நகரசபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கொள்களத்தில் சி.சி.ரி.வி கமரா பொருத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.