மிரட்டல்கள் மத்தியில் கலைந்து போனது பல்கலை மாணவர்களின் போராட்டம்.

0 101

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

எனினும் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் சில மாணவர்கள் உண்ணா நோன்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் மேலும் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ப.உஜந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,

நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில் யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் மற்றும் துணைவேந்தருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே தான் இதனைச் செய்யததாக பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்ததோடு, இராணுவம் மற்றும் பொலிஸாரை திருப்பி அனுப்ப முடியாது எனவும் இது பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டிலேயே நடைபெற்றது எனவும் தெரிவித்திருந்தார்.

எமது கலந்துரையாடல் முடிவடைந்து வெளியே வந்த போது, சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் அறிவித்தல் விடுத்திருந்தனர்.

என்னவெனில் இன்று போராட்டத்தில் கூடியிருப்போர் புகைப்படம் மற்றும் காணொளி மூலம் அடையாளப்படுத்தப்பட்டு சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிப்பு விடுத்திருந்தனர்.

ஆகவே எமது சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்களாகவும், நாம் பயங்கரவாதிகள் அல்ல என்பதை சர்வதேசத்திற்கு எடுத்தியம்புவதற்காகவும் நாம் வன்முறையை கையாளாது அமைதியான முறையில் இந்த போராட்டத்தை நிறைவு செய்கிள்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.