ஒரே நாளில் 1400 டொல்பின்கள் கொன்று குவிப்பு – செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்

0 178

ஒரே நாளில் ஏராளமான டொல்பின்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை சர்வதேச பாதுகாப்பு குழுக்கள் கண்டித்துள்ளன.

நோர்வே அருகில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது பாரோ தீவுகள். இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவுகளில் வேட்டையாடுவதற்கு எந்த தடையும் இல்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த தீவுகளில் வசிக்கும் உள்ளூர் சமூகத்தினர், கடல்வாழ் விலங்கினங்களை குறிப்பாக திமிங்கிலம் மற்றும் டொல்பின்களை வேட்டையாடுகின்றனர். கிரைண்ட் என அழைக்கப்படும் இந்த வேட்டையில் திமிங்கலங்களும் டொல்பின்களும் கொடூரமாக கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கடல்நீர் செந்நிறமாக காட்சியளிக்கும். இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த கொடூரமான வேட்டை தொடர்கிறது.

அவ்வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரோ தீவின் வேட்டைக்காரர்களால் நடத்தப்பட்ட வேட்டையின்போது ஒரே நாளில் 1400 டொல்பின்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐஸ்ட்ராயில் உள்ள ஸ்கலாபோத்னர் கடற்கரையில் ஆழமற்ற பகுதியில் டொல்பின்களை கொண்டு வந்து கத்திகளால் வெட்டி கொன்றுள்ளனர். இதனால் அந்த பகுதி தண்ணீர் முழுவதும் இரத்தம் கலந்து செந்நிறமாக காட்சியளித்தது.

இந்த அளவிற்கு ஏராளமான டொல்பின்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை சர்வதேச பாதுகாப்பு குழுக்கள் கண்டித்துள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள விலங்குகள் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது மிகவும் கொடுமையானது என்றும் இந்த வேட்டை தேவையற்றது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.