இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதும் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது – மகிழ்ச்சியடையும் கல்மடு கிராம விவசாயிகள்
புரேவி புயல் காரணமாக வவுனியாவில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது.
இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நீர்ப்பாசனமான கல்மடு பெரிய நீர்ப்பாசனத்தின் நீர்மட்டம் ஐந்தரை கன அடியாக அதிகரித்துள்ளது.
113 பங்காளிகளை கொண்ட கல்மடு பெரிய நீர்ப்பாசனமானது சுமார் 400 ஏக்கர் வயல்நிலங்களை கொண்டுள்ளது.
எனினும் இந்த வருடம் ஏற்பட்ட கடும் வரடசியினால் விவசாயிகள் 2020 ஆம் ஆண்டுக்கான சிறுபோக செய்கையினை கைவிட்டனர்.
இதனை அடுத்து பெரும்போக பயிர்ச்செய்கையினையும் மேற்கொள்ள வேண்டாம் என விவசாயத்திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் புரேவி புயல் காரணமாக பெய்துவரும் அடைமழையினால் கல்மடு குளத்தின் நீர்மட்டம் 3 அடி உயர்வடைந்து ஐந்தரை கன அடியாக அதிகரித்துள்ளது.
எனினும் இந்த நீர்மட்டம் இன்றுடன் 7 அடிகளாக உயர்வடையலாம் என கல்மடு பெரிய நீர்ப்பாசனத்தின் கமக்காரர் அமைப்பு தலைவர் கு.தில்லைவாசன் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.
புயல் காரணமாக தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளபோதும் குளத்தின் நீர்மட்டம் உயரடைந்துள்ளதனால் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் புரேவி புயல் காரணமாக பெய்துவரும் அடைமழையினால் கல்மடு கமக்காரர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் வாய்க்கால் துப்பரவு மற்றும் வீதி செப்பனிடுதல் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் அமைப்பின் தலைவர் கவலை வெளியிடடார்..
இதேவேளை நேற்று மாலை முதல் பெய்துவரும் அடைமழை காலை 6.40 மணியளவில் சடுதியாக குறைவடைந்துள்ளதுடன் பலத்த காற்று வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.