யுத்த சூழலில் இல்லாத போதும் மன்னார் நகரம் பின்தங்கி காணப்படுவதாக ஆளுநர் கவலை.

0 67

மன்னார் மாவட்டத்தில் நெல் உற்பத்தி மற்றும் மீன் பிடி ஆகியவை முக்கியமான ஒன்றாக உள்ளது.

ஆனால் குறித்த நெல் மற்றும் கடல் உணவுகள் பெறுமதி சேர்க்கப்படாத பொருட்களாக இந்த மாவட்டத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்படுவதாக வட மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேலின் ஏற்பாட்டில் ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று வியாழக்கிழமை (17) மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர்..

மன்னார் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், அதனுடைய தேவைகள் மிக குறைந்த அளவில் உள்ளதை அவதானிக்கக் கூடியாதாக உள்ளது.

வடக்கு மாகாணம் நீண்ட ஒரு யுத்தத்தினுள் உள் வாங்கப்பட்டிருந்தாலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்பாணம் போன்ற மாவட்டங்களே முழுமையாக உள் வாங்கப்பட்டிருந்தது.

ஆனால் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் நகரப்பகுதிகள் சூழலுக்குள் இல்லாது இருந்த போதும் மன்னார் நகரம் இத்தகைய ஒரு வளர்ச்சி அடையாத ஒரு நிலையில் காணப்படுகின்றது.

உட்கட்டமைப்பு வசதிகள் ஒரு திட்டமிட்ட முறையில் நகர மயமாக்களுக்குள் உள் வாங்கப்படாமல் சீரமைக்கப்படாத ஒரு நிலையில் காணப்படுகின்றது.

இது மக்களுக்கு பல்வேறு விதமான அசௌகரியங்களை ஏற்படுத்துகின்ற ஒன்றாக காணப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் இதனை நன்றாக உணர்ந்திருப்பார்கள்.

இவற்றை எல்லாம் ஒழுங்கமைத்து செம்மையாக செயல் படுத்த வேண்டிய பொறுப்பு சமூக நலன் விரும்பிகளினுடையதும்,அரசியல் தலைமைத் துவங்களினுடையதுமான பாரிய பொறுப்பாக உள்
ளது.

எனவே இங்கே எடுக்கப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் திட்ட மிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நகர மயமாக்கல் என்பது தான் மாவட்டத்தின் முக்கிய விடையமாக காணப்படுகின்றது.

அதனூடாக பொருளாதார வளர்ச்சிகள்,உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக கிராமங்களை நகரத்தோடு இணைத்துக் கொண்டு அதனூடாக பொருளாதார மையங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி விடையங்களை அந்த மாவட்டம் பெற்றுக் கொள்ளும்.

எனவே திட்டமிடல் என்ற விடையத்தை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் இனி மேல் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் நெல் என்பது ஒரு முக்கியமான உற்பத்தி பொருளாக உள்ளது.

மீன் பிடி தொழிலும் முக்கியமான தொன்றாக உள்ளது. ஆனால் குறித்த நெல் மற்றும் கடல் உணவுகள் பெறுமதி சேர்க்கப்படாத பொருட்களாக இந்த மாவட்டத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்படுகின்றது.

எனவே மன்னார் மாவட்டத்தில் திட்டமிட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் மன்னார் மாவட்டத்தின் கல்வி,சுகாதாரம் போன்ற நடவடிக்கைகளிலே நாங்கள் அக்கறையாக செயல்பட இருக்கின்றோம்.

கல்வி அமைச்சின் செயலாளருக்கு மிக கடுமையான சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளேன். அனைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும்.

நான் நேரடியாக கலந்துரையாடியதற்கு அமைவாக கடந்த வாரம் புதிதாக 107 வைத்தியர்கள் எமக்கு சுகாதார அமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கில் உள்ள வைத்தியர்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதாகவும் சுகாதார அமைச்சர் உறுதி வழங்கி உள்ளார்.

அதனூடாக வட மாகாணத்தின் வைத்தியர் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்படும். தாதியர் வெற்றிடங்களையும் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்கான வைத்திய கட்டிட தேவையை பூர்த்தி செய்ய சுகாதார அமைச்சின் ஊடாக இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடியமைக்கு அமைவாக குறித்த இரு வைத்தியசாலைகளுக்குமான தேவையினை நாங்கள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் சமர்ப்பித்துள்ளோம்.

மிக விரைவில் குறித்த வைத்தியசாலைகளில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்படும்.எனவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது வீதி,போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவம்,மீன்பிடி,விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது..


Leave A Reply

Your email address will not be published.