இலங்கையின் பொறுப்பு கூறலை பிரித்தானியா முன்னின்று கையாளவுள்ளது..

0 60

ஜெனீவா தீர்மானம் தொடர்பான அமெரிக்காவின் யோசனை வரவேற்கத்தக்கது என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, புதிய தீர்மானமொன்றே கொண்டுவர வேண்டும்.

அது மேலும் வலுவானதாக இருக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் கூட்டமைப்பின் ஊடப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதனை வரவேற்று கருத்து வெளியிடும் போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு பொறுப்புக்கூறலை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கடந்த அரசாங்கத்திற்கு இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட நிலையில் தற்போதைய கோட்டாபய அரசு குறித்த தீர்மானத்திலிருந்து விலகியுள்ளது.

இந்த நிலையில் நடைபெறவுள்ள அமர்வில் பிரித்தானியா முன்னின்று இந்த விடயங்களை கையாளவுள்ளது.

எனினும் கடந்த காலத்தில் இலங்கை தொடர்பான பிரேரணைகளை தயாரித்து தீர்மானங்களை நிறைவேற்றிய அனுபவம் நிறைந்த அமெரிக்காவும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுவதானது இலங்கையின் பொறுப்புக்கூறலை மேலும் அழுத்தமாக கூறுவதற்கும் சர்வதேசத்தின் மேற்பார்வையையும் பிடியையும் வலுவாக்குவதற்கும் ஏதுவானதாக அமையும்.

எனவே புதிய பிரேரணையொன்று தயாரிக்கப்படும் செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போது பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து வலுவான பிரேரணை ஒன்றை தயாரிப்பதற்குரிய முன்மொழிவுகளை ஏகோபித்து வழங்குவதே பொருத்தமானது.

அவ்வாறு இல்லாமல் தமிழ் தலைமைகள் இந்த விடயத்தினை தனித்தனியாக அரசியல் இலாபமடைவதற்காக கையாள முனைகின்றபோது இலங்கை அரசாங்கம் மிக இலகுவாக நழுவிக்கொள்ளும் நிலைமை ஏற்படும் ஆபத்துள்ளது.

ஆகவே இந்தத் தருணத்தினை சரியாக புரிந்துகொண்டு அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுப்பதோடு அதற்குரிய முன் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தயாராகவே உள்ளேன் என தெரிவித்தார்..

Leave A Reply

Your email address will not be published.