திலக் வர்மாவின் அதிரடி சதத்தின் உதவியுடன் தென் ஆபிரிக்காவை 11 ஓட்டங்களால் வென்றது இந்தியா
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியன் சுப்பர்ஸ்போர்ட் பார்க் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 3ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் திலக் வர்மா குவித்த ஆட்டம் இழக்காத கன்னிச் சதத்தின் உதவியுடன் இந்தியா 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
கணிசமான மொத்த ஓட்டங்கள் பெறப்பட்டதும் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்த்தியதுமான அப் போட்டியில் திலக் வர்மா சதம் குவித்து, இந்தியாவின் எதிர்கால 3ஆம் இலக்க துடுப்பாட்ட வீரருக்கு பொறுத்தமானவர் என்பதை உணர்த்தினார்.
அத்துடன் இந்தியா சார்பாக இரண்டாவது மிகக் குறைந்த வயதில் ரி20 கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்த வீரர் என்ற பெருமையை 22 வயதான திலக் வர்மா பெற்றார்.
இந்தியா சார்பாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த வயதில் சதம் குவித்தவர் யஷஸ்வி ஜய்ஸ்வால் ஆவார். அவர் சதம் குவித்தபோது அவரது வயது 21 ஆகும்.
திலக் வர்மா 56 பந்துகளில் 8 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களைக் குவிக்க இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர் சஞ்சு செம்சன் இரண்டாவது நேரடித் தடவையாக ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.
இதனை அடுத்து அபிஷேக் ஷர்மாவும் திலக் வர்மாவும் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 107 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
அபிஷேக் ஷர்மா 50 ஓட்டங்ளைப் பெற்றார்.
பந்துவீச்சில் அண்டைல் சிமிலேன் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கேஷவ் மஹாராஜ் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா, 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று தொல்வி அடைந்தது.
தென் ஆபிரிக்காவின் முன்வரிசை மற்றும் மத்திய வரிசை வீரர்கள் அனைவரும் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கி போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஏழு வீரர்கள் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற போதிலும் அவர்களில் இருவரே 40 ஓட்டங்களைக் கடந்தனர்.
18 ஓட்டங்களைப் பெற்ற டேவிட் மில்லர் 5ஆவது விக்கெட்டில் ஹென்றிச் க்ளாசனுடன் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினார்.
ஹென்றிச் க்ளாசன் 41 ஓட்டங்களையும் மார்க்கோ ஜென்சன் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
மார்க்கோ ஜென்சன் 19ஆவது ஓவரில் 26 ஓட்டங்களை விளாசியபோதிலும் கடைசி ஓவரில் கட்டுப்பாட்டுடன் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் அர்ஷ்திப் சிங் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வருண் சக்கரவர்த்தி 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.