தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை சில கட்சிகள் இதுவரையில் வழங்கவில்லை!
நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை சில கட்சிகள் இதுவரையில் வழங்கவில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்சிகளின் செயலாளர்களால் அனுப்பப்பட்டுள்ள பெயர்கள் மாத்திரம் இதுவரையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன அதிகாரம் கட்சி, இலங்கை தமிழரசு கட்சி ஆகியன தங்களது கட்சிக்கான தேசியப் பட்டியல் உறுப்பினர்களை அறிவித்துள்ளன.
அதேநேரம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 5 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.
அவற்றில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை மாத்திரம் அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஏனைய 4 உறுப்பினர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றது.
அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்று வழங்கப்பட வேண்டும் என தங்களது தரப்பிலிருந்து இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.