வவுனியாவில் சட்டவிரோத கிரவல் அகழ்விற்கு உதவிய அதிகாரிகள் விபரம்..

0 106

வவுனியாவில் காடுகளை அழித்து சட்டவிரோதமான முறையில் கிரவல் அகழ்வில் ஈடுபடுவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன், அதற்கு உடந்தையாக செயற்படும் ஒருசில அதிகாரிகளின் விபரங்களும் வெளிப்படுத்தப்படும் என பாராறுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கிரவல் அகழ்வுப்பணி தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

வவுனியாவில் கிரவல் அகழ்வு என்ற போர்வையில் ஏக்கர் கணக்கான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் 10 ஏக்கருக்கு மாத்திரம் கிரவல் அகழ்விற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 48ஏக்கர் அளவில் கிரவல் அகழ்வுப்பணி இடம்பெற்றுள்ளது.

நாம்பன்குளம் பகுதியிலும் இதேநிலமைதான்.அங்கிருந்த பெறுமதியான மரங்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அதற்கான எந்த விதமான ஆவணங்களும் திணைக்களங்களிடம் இல்லை.

குறித்த பகுதியை நான் சென்று பார்வையிட்ட போது கிரவலை நிரப்பிவைத்திருந்த டிப்பர் வாகனம் அதனை கொட்டிவிட்டு கடந்து செல்கின்றது.

அனுமதிப்பத்திரம் இருந்தால் ஏன் அதனை கொட்டவேண்டும். எனவே வனவளத்திணைக்களம் பொதுமக்களின் அன்றாட விடயங்களில் மாத்திரம் தலையிடுவதை நிறுத்தி இப்படியான பிரச்சனைகளையும் பார்க்கவேண்டும்.

கிரவல் அகழ்வுடன் தொடர்புடைய சில அதிகாரிகளின் தகவல்கள் கூட பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட மட்டங்களில் தீர்க்கமுடியாத இவ்வாறான பிரச்சனைகளை தனது கவனத்திற்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பாக இனி உயர்மட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இனிவரும் காலங்களில் கிரவல் அகழ்விற்கான அனுமதி வழங்கும் போது அரச அதிபர் மற்றும் ஏனைய திணைக்கள மட்டங்களில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னர் அதனை என்னுடைய கவனத்திற்கு கொண்டுவருமாறு தெரிவித்துள்ளேன்.

ஏனெனில் மக்கள் முறையிடுவது மக்களின் பிரதிநிதிகளான எம்மிடம் தான்.பொலிசாரும் இந்தவிடயத்தில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.