யாழ். மாநகர சபை முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டார்..
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற மேயர் தெரிவுக்கான போட்டியில் வி. மணிவண்ணன் வெற்றிபெற்றுள்ளார்.
முதல்வர் தெரிவுக்கான போட்டியில் இ.ஆனோல்ட்டுடன் வி.மணிவண்ணனும் களமிறங்கியிருந்தார்.
இந்நிலையில் சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும், இ.ஆனோல்ட்டுக்கு 20 வாக்குகளும் கிடைத்திருந்தன.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாக்களிப்பில் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 45 உறுப்பினர்களில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
ஏனைய 41 உறுப்பினர்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 10 உறுப்பினர்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள் உட்பட 21 உறுப்பினர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்கினார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினரும் உள்ளடங்கலாக 20 உறுப்பினர்கள் இம்மானுவேல் ஆர்னோல்ட்க்கு ஆதரவு வழங்கினார்கள்.
அதனை அடுத்து ஒரு வாக்கு வித்தியாசத்தில் சடடத்தரணி வி.மணிவண்ணன் யாழ்.மாநகர சபையின் முதல்வராக தெரிவானார்.