பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை போராட்டம் யாழ் மண்ணை சென்றடைந்தது.
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் யாழ்ப்பாணம் மண்ணை சென்றடைந்தது.
பேரணியில் பெரும் திரளான மக்கள் இணைந்து முகமாலையில் வரவேற்று இணைந்து கொண்டனர்.
வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் கடந்த 3ஆம் திகதி புதன்கிழமை அம்பாறை பொத்துவிலில் ஆரம்பமாகி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்கள் சென்று நேற்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது.
கிளிநொச்சியில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பேரணி பரந்தன், பளை, முகமாலையை வந்தடைந்தடைந்தது.
தொடர்ந்து கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி, அரியாலை, யாழ் மாநகரம், யாழ் பொதுநூலகம், யாழ் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம், யாழ் பல்கலைக்கழகம் நல்லூர் தியாகதீபம் நினைவிடம், கல்வியங்காடு, கோப்பாய், நீர்வேலி. வல்லைவெளி, புறாபொறுக்கி சந்தி, கரணவாய், நெல்லியடி, மாலுசந்தி மந்திகை, பருத்தித்துறை, திக்கம், அல்வாய், வதிரிச்சந்தி, உடுப்பிட்டி. வல்வெட்டித்துறை தீருவில் வெளி, வல்வெட்டித்துறை நகரம், நெடியகாடு ஊடாக பொலிகண்டியில் நிறைவடையும்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேசம் நீதியை பெற்று தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு வடகிழக்கு தமிழ் அமைப்புகள் ஓரணியில் இணைந்து கையொப்பம் இட்டு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றவேண்டும், வடக்கு- கிழக்கில் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி, அரசியல் கைதிகள் விடுதலை, தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்கவேண்டும், இஸ்லாமிய மக்களின் மத நம்பிக்கையான ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் பல்வேறு வாழ்வுரிமை கோரிக்கைகளை முன்வைத்து பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை பேரணி முன்னெடுக்கப்படுகிறது.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமிழ் தாயகத்தில் இடம்பெறும் மக்கள் பேரெழுச்சிப் போராட்ட வடிவங்களில் முதன்மை இடத்தை இந்தப் போராட்டம் பெற்றுள்ளது.
பொலிஸாரின் அடக்குமுறைக்கு மத்தியிலும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தனது இலக்கை அண்மித்துள்ளது.