காணாமல் ஆக்கப்பட்டமைக்கு ஈ.பி.டி.பியும் காரணம் – அமைச்சரை சந்திக்க மறுக்கும் உறவுகள்
தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்முடன் கலந்துரையாடியதாகவும் கூறியிருந்தார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு பதில் வழங்கிய போதே யோ.கனகரஞ்சினி மேற்கண்டவற்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள யோ.கனகரஞ்சினி.
எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும் என, தொடர்ச்சியாக கூறி வருகின்றோம்.
தற்போதைய ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே, எங்கள் உறவுகளில் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்திலும், அரசோ அல்லது அந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவோ எமக்கு எந்தத் தீர்வினையு வழங்கவில்லை.
மாறாக, எங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக காட்ச்சியும் காரணமாகும்.
இந்தநிலையில் தாய்மார்களை நீதிமன்றில் நிறுத்தப் போவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். அவர் இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், அவரை எப்படி சந்திக்க முடியும்?
அவ்வாறு சந்தித்ததாலும், அமைச்சரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் என்ன நியாயத்தை பெற்றுத் தரமுடியும்?
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இலங்கை அரசினால் நீதி கிடைக்கும் என்ற நம்பிகை எமக்கு அற்றுப் போய்விட்டது.
இந்த நிலையில், இந்த அரசாங்கத்தின் பிரதிநிதியாகவுள்ள அமைச்சரை சந்திப்பதில் பயனில்லை.
எனவே, வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் சார்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு நாம் தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்.