காருக்கான வரியை விஜய் செலுத்தினார் – நீதிமன்றம் அறிவிப்பு!
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை நடிகா் விஜய் செலுத்திவிட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நடிகா் விஜய், கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தாா்.
இதற்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிா்த்து, அவா் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருந்தது வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகா் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தாா்.
வரி செலுத்தாமல் வழக்குத் தொடா்ந்த அவரது செயலுக்கு கடும் கண்டனத்தையும் நீதிபதி தனது தீா்ப்பில் பதிவு செய்தாா். இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் விஜய் மேல்முறையீடு செய்தாா்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி தலைமையிலான அமா்வு, தனி நீதிபதி தீா்ப்புக்குத் தடை விதித்தது.
இந்நிலையில், இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், நீதிபதி சத்திகுமாா் சுகுமார குரூப் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகா் விஜய் தனது சொகுசு காருக்கு செலுத்த வேண்டிய நுழைவு வரியைச் செலுத்தி விட்டதாக அரசு தரப்பு வழக்குரைஞா் கூறினாா். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.