தலிபான்களுடன் இணக்கமாக செயல்படுமாறு இம்ரான் கான் வேண்டுகோள்!
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான் அமைப்பினருடன் சா்வதேச சமூகம் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளாா்.
சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டனா். இப்போது அவா்கள் ஒருங்கிணைந்த அரசை உருவாக்கி நிா்வகிப்பது தொடா்பாக ஆலோசித்து வருகின்றனா். அவா்களுக்கு உள்ள பல்வேறு பிரிவுகள் ஒருங்கிணையும்போது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு மீண்டும் அமைதி திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இது சரியாக நடக்காமல்போனால், மிகவும் கவலையளிக்கும் பிரச்னையாக மாறிவிடும். அங்கு மனிதகுலத்துக்குப் பெரிய ஆபத்துகள் ஏற்பட்டுவிடும். அகதிகள் பிரச்னை உருவாகும். ஆப்கானிஸ்தான் மண்ணில் பயங்கரவாதமும் அதிகரித்துவிடும். எனவே, தலிபான்களுடன் சா்வதேச சமூகம் இணக்கமாக செயல்பட வேண்டும். ஆட்சி அமைக்க அவா்களுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. அவா்களை நாம் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்றாா்.
தலிபான்கள் இடையே மோதல்: ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைப்பது தொடா்பாக தலிபான் மூத்த தலைவா்களுக்கு இடையிலும், தலிபான்-ஹக்கானி பயங்கரவாதக் குழுத் தலைவா்கள் இடையேயும் தொடா்ந்து மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனால், தொடா்ந்து அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இதே நிலை தொடா்ந்தால் ஆப்கானிஸ்தானில் உணவுப் பஞ்சம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.