வீட்டிலிருந்தே NVQ சான்றிதழ்களை பெறுவதற்கு புதிய வேலைத்திட்டம்
இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக, திறன்கள் அபிவிருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு, தொலைநோக்கு கல்வியின் ஊடாக தொழில்முறை அறிவு மற்றும் கல்வி அறிவைக்கொண்ட கற்ற இளம் சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு…
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பரிந்துரைக்கு அமைய, இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொலவின் வழிகாட்டலின் கீழ், இந்த திட்டங்கள் உலகெங்கிலும் உள்ள பரந்த அளவிலான தொழில்சார் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பாடநெறியின் இறுதியில் நடத்தப்படுகின்ற பரீட்சை ஒன்றின் பின்னர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் NVQ தொழில் மட்டத்தில் அங்கீகரிக்கக் கூடிய நிலைக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதே இந்தத் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
திறன்கள் அபிவிருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள தொழிற்நுட்ப நிறுவனங்களின் பாடத்திட்டங்களின் கீழ் இந்த பாடநெறிகள் இடம்பெறுவதுடன், அந்தந்த துறைகளில் சம்பந்தப்பட்ட பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து ஒன்லைன் முறையின் கீழ் நடத்தப்படும் நிகழ்நிலை பரீட்சையின் பின்னர் இந்த மாணவர்கள் NVQ நிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை அத தெரண 24 (கல்வி) அலைவரிசையின் ஊடாக முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதுடன், அதன் பின்னர் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும்இ எதிர்காலத்தில் ஏனைய தொலைக்காட்சிகள் ஊடாகவும், மாணவர்களுக்காக பல்வேறு பாடநெறிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக திறன்கள் அபிவிருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.