ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்குச் சாதகமாக பெற்றுத் தருவோம் – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres) அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்தார்.
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில், நேற்றைய தினம் (19) இடம்பெற்ற ஜனாதிபதிக்கும் ஐ.நா பொதுச் செயலாளருக்கும் இடையிலான விசேட சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். DSC7892உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு வருமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு…
ஐ.நா தலைமையகத்துக்குப் பிரவேசித்த ஜனாதிபதியை அன்புடன் வரவேற்ற குட்டரெஸ் அவர்கள், 1978ஆம் ஆண்டில், சர்வதேச பாராளுமன்றச் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்குத் தான் விஜயம் செய்திருந்ததையும் கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்குச் சுற்றுலா சென்றதையும், அதன்போதான அழகான நினைவுகளையும் ஞாபகப்படுத்தினார்.
DSC7928ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையாளராக, இலங்கை தொடர்பில் தான் பணியாற்றியமை மற்றும் 2006ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தமை குறித்தும், குட்டரெஸ் அவர்கள் நினைவுபடுத்தினார். சுமார் 30 ஆண்டுகள் நிலவிய யுத்தம் காரணமாக, மிகவும் சிக்கலான நிலைமைக்கு விழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், இந்து சமுத்திர வலயத்தில், மாபெரும் சமூக மற்றும் பொருளாதாரப் பணிகளை நிறைவேற்றும் இலங்கையிடமிருந்து, தொடர்ந்தும் அப்பணியை எதிர்பார்ப்பதாக, பொதுச் செயலாளர் எடுத்துரைத்தார்.
ஐ.நா பொதுச் செயலாளருடன் கலந்துரையாடக் கிடைத்தமையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், உலகம் முகங்கொடுத்துள்ள மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் ஐ.நா முன்னெடுத்து வரும் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் இரண்டாவது தடவையாகவும் ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்குத் தெரிவாகியுள்ளமை தொடர்பில், ஜனாதிபதி தனது பாராட்டுகளை அவருக்குத் தெரிவித்துக்கொண்டார்.
DSC7971சிறிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இலங்கை போன்ற நாடொன்று, கொவிட் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் முகங்கொடுத்துள்ள சவால்கள் தொடர்பில், ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள், ஐ.நா பொதுச் செயலாளருக்கு எடுத்துரைத்தார். கொவிட் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், இலங்கையின் கல்வி மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் தீர்க்கமான முறையில் எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், தொற்றுப்பரவலை வெற்றிகரமாக எதிர்கொள்ள, உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும், பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இதுவரையில், இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், நவம்பர் மாத இறுதிக்குள், 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்று, தரவுகளுடன் எடுத்துரைத்தார்.
இதன்போது, தடுப்பூசி ஏற்றலில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு, பொதுச் செயலாளர் அவர்கள், தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகத் தெரிவான தான், பொதுமக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை அவ்வாறே நிறைவேற்றுவதில், கொவிட் தொற்றுப் பரவலானது பெரும் தடையாக இருக்கின்றதெனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இருப்பினும், 30 வருட காலமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் ஏற்பட்ட இடைநிலைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகத் தெளிவுபடுத்தினார்.
பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கல், காணிகளை மீளக் கையளித்தல் மற்றும் 2009ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்திகள் மற்றும் வடக்கு மாகாண சபைக்கான உறுப்பினர்களை, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுப்பதற்காக ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பு தொடர்பிலும், ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.
காணாமற்போனோர் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும், பொதுச் செயலாளரிளிடம், ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களில் பலரை, தான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விடுவித்துள்ளதாக எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், அவ்வாறு விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் நீண்ட காலமாகத் தடுப்பிலுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்டச் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர், நீண்ட காலம் தடுப்பில் இருந்ததைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அவர்களை விடுவிப்பதற்குத் தான் தயங்கப் போவதில்லை என்றும், பொதுச் செயலாளரிடம் தெரிவித்தார்.
இலங்கைக்குள் மிகவும் பலமான முறையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே தன்னுடைய இலக்கு என்றும் அதன்படி, போராட்டக்காரர்கள் மீது முன்னரைப் போன்று தடியடி, நீர்த்தாரைத் தாக்குதல் போன்றவற்றை நடத்த, தன்னுடைய ஆட்சியின் கீழ் ஒருபோதும் அனுமதியில்லை என்றும் போராட்டக்காரர்களுக்கென்றே, தன்னுடைய அலுவலகத்துக்கு முன்னால் தனி இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதென்றும், ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். நாட்டுக்குள் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, சிவில் அமைப்புகளுடன் இணைந்து தான் செயற்படும் விதம் தொடர்பிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெளிவுபடுத்தினார்.
இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டுமென்றும் அதற்காக, புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்குத் தான் அழைப்பு விடுப்பதாகவும், ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையுடன், எப்போதும் மிக நெருக்கமாகப் பணியாற்றத் தயாரென மீண்டுமொருமுறை எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதம் ஏற்படப்போவதில்லை என்பதைத் தன்னால் உறுதிப்படத் தெரிவிக்க முடியுமென்ற போதிலும், மதவாதத் தீவிரவாதம் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை போன்று ஏனைய நாடுகளும் அவதானமாக இருக்க வேண்டுமென்று எடுத்துரைத்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு