இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
கொவிட் – 19 தொற்று நிலைமையால் சூம் Zoom தொழில்நுட்பம் ஊடாக இதுதொடர்பான நிகழ்வுகள் இடம்பெற்றன.
பிரதான நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் ,இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல. பீரிஸ் ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய தூதுரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பிரதான நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த காணொளி நிகழ்வு இடம்பெற்றது.
பிரமுகர்களின் உரைகளைத்தொடர்ந்து சூம் தொழில்நுட்பம் ஊடாக திறப்பு விழா இடம்பெற்றது.h
காலி மாவட்டத்தில் 50 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 479 வீடுகளும், கண்டி மாவட்டத்தில் 184 வீடுகளும், அட்டன் மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் 155 வீடுகளும், நுவரெலியா, அக்கரபத்தனை பகுதியில் 267 வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. குறிப்பிட்ட பகுதிகளில் அரச அதிகாரிகள் ஊடாக வீடுகளுக்குரிய ஆவணங்கள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதேவேளை, இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் புஸல்லாவை சரஸ்வதி கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.
நுவரெலியா – இராகலை லிடேஸ்டேல் தோட்ட பிரிவான டியநிலை மேல் பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 166 வீடுகள் சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளையடுத்து பயனாளிகளுக்கு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.
நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேசத்திற்குறிய லிடேஸ்டெல் வீடமைப்பு திட்ட வைபவம், நுவரெலியா மாவட்டத்தின் பிரதான நிகழ்வாக இடம் பெற்றது.
இதற்கான ஏற்பாடுகள் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
சட்டத்தரணி பி.ராஜதுரை, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எ.பிலிப், நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ், அர்ஜுன் ஜெயராஜ்,பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதி அதிகாரிகள் மற்றும் யு.என்.எபிடாட் நிறுவன பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் வீடுகளும் உத்தியோகப்பூர்வமாக மக்களுக்கு கையளிக்கப்பட்டன.
கடந்த நல்லாட்சி அரசாங்கம், டியநிலை தோட்டத்தில் இந்திய நிதியுதவியுடன் யூ.என்.எபிடாட் நிறுவனம் குறித்த 166 வீடுகளின் கட்டுமான பணிகளை முன்னெடுத்திருந்தது..
இரண்டு படுக்கை அறைகள் ,ஒரு வரவேற்பு அறை,சமையல் அறை அடங்களாக ஐந்து அறைகள் இந்த வீடுகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..