சர்வதேச விமான பயணங்களை ஆரம்பிக்கும் இரத்மலானை விமான நிலையம்
இலங்கையின் கொழும்பு, இரத்மலானை விமான நிலையம் 5 தசாப்தங்களுக்குப் பின்னர் சர்வதேச விமான பயணங்களை ஆரம்பிக்கவுள்ளது. இதன்படி முதல் விமானம் அடுத்த மாதம் மாலைதீவுக்குப் புறப்படும் என இலங்கையின் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாலைதீவு ஏர்லைன்ஸுடன் நீண்ட பேச்சுக்களின் பின்னர், அவர்கள் இரத்மலானையிலிருந்து விமானங்களை மீண்டும் ஆரம்பிக்க ஒப்புக்கொண்டனர்.
ஆரம்பத்தில், 50 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய விமானம் கொழும்புக்கும் மாலைதீவுக்கும் இடையே முதலில் சேவையில் ஈடுபடும். இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 இல் அமைக்கப்பட்டது.
1968 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானச்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதால் இரத்மலானையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. இரத்மலானை விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை மையமாகக் கொண்ட ஒரு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக உருவாக்கப்படும்.