ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை
ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளக்கிய குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (10) நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது தொடர்பான கடிதம் ஏற்கனவே இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூன்று நாட்டு தூதரகங்களிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் தேசிய கட்சிகளிற்கும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் அந்த கடிதம் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அனுப்பப்பட்ட அந்த கடிதத்திலே 1987 ஆம் ஆண்டின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாகிய, நடைமுறையிலுள்ள மாகாண சபைகள் முறைமையானது இலங்கையால் கடந்த 3 வருடங்களாகக் கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமானது தேர்தலை நடாத்துவதற்கு எவ்வித முயற்சியையும் எடுக்காமல், பதிலாக சபைகளுக்குக் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அகற்றுவதிலேயே ஈடுபட்டுள்ளது.
இந்திய-இலங்கை ஒப்பந்தமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குரிய பிராந்தியத்தை தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாகத் தெளிவாக அங்கீகரித்துள்ளது.
குறித்த உடன்படிக்கையின் மூலமாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கான 13வது திருத்தத்தை இலங்கையானது எப்பொழுதுமே முழுமையாக அமுல்படுத்தவில்லை என்பதுடன் தற்பொழுது அதனை மேலும் பலமிழக்கச் செய்வதிலேயே ஈடுபட்டுள்ளது.
இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை அடைவதற்கும் அதே சமயம் எமது பிராந்தியத்தில் சுதந்திரத்தையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் உதவுவதன் பொருட்டு தமிழ் மக்கள் உலகிலுள்ள அதிகாரம்மிகுந்த நாடுகளில் ஒன்றாகிய இந்தியாவிடம் அழைப்பு விடுக்கின்றனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான கடந்த கால வன்முறை வடிவங்கள் மீள – இடம்பெறாமலிருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவல்ல நிரந்தர அரசியல் தீர்வினை சனநாயக ரீதியில் நிலைநாட்டுவதற்காகவும், அவர்களுக்கான ஈடுசெய் நீதியை வழங்குவதன் பொருட்டும் அவர்களை அடக்குமுறையிலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுவிப்பதன் பொருட்டும் இலங்கையின் வடக்கு- கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மக்களுக்காக ஐ.நாவினால் கண்காணிக்கப்படுகின்ற குவாட் நாடுகளான அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா போன்றனவற்றால் நடாத்தப்படுகின்றதுமான பொதுசன வாக்கெடுப்பினை ஒருங்கிணைப்பதற்காக உடனடியானதும் அவசரமானதுமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இந்தியாவிடம் கோருகின்றேன் என்கிறார்.