அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்ற தீர்மானம்
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களான 18 – 19 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள், இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இன்று (15) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
´அத்துடன், ஏனைய மாவட்டங்களிலுள்ள மேற்படி வயதுப் பிரிவைச் சேர்ந்த அனைத்துப் பிள்ளைகளுக்கும், இம்மாதம் 21ஆம் திகதி முதல், பாடசாலைகள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாகத் தடுப்பூசி ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைவாக, பாடசாலை மாணவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்படவுள்ளன´.
இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், சுகாதாரப் பரிந்துரைகளுக்கமைய, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான மூன்றாவது டோஸ் (Booster) தடுப்பூச்சியைச் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமையன்று, மேலும் 6 இலட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன என்றும் கோரப்பட்டிருந்த தடுப்பூசிகள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டு இருக்கின்றன என்றும், கொவிட் தடுப்புச் செயலணியின் உறுப்பினரும் விசேட வைத்திய நிபுணருமான பிரசன்ன குணசேன தெரிவித்தார்.