கடனுக்காக மாகாண சபைத் தேர்தல்?
எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான கடனை வழங்குவதற்காக , மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா எந்தவொரு நிபந்தனையையும் முன்வைக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நேற்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
அமைச்சரவை இணை பேச்சாளர் கலாநிதி ரமேஷ் பதிரண மற்றும அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் டலஸ் அழகப்பெரும பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஊடகவியலாளரின் கேள்வி : இந்தியா எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக எமக்கு கடன் வழங்குகின்றது. இருப்பினும் இந்தியா இந்த வருடத்திற்குள் மாகாண சபைத்தேர்தலை நடத்துமாறு நிபந்தனை விதிக்கின்றது. இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்தியா இந்த கடனை வழங்குகின்றது. இந்த மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயின் சுமார் 1,500 கோடி ரூபா தொடக்கம் 2,000 கோடி ரூபா இதற்காக செலவிட வேண்டி ஏற்படும். நாடு எதிர்கொண்டுள்ள இன்றைய கொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது அல்லா?
அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் பதில் : மாகாண சபைத் தேர்தலுக்கும் இந்த கடனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
ஊடகவியலாளரின் கேள்வி : நிபந்தனையின்றி இந்தியா கடன் வழங்குகின்றதா?
அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் பதில் : பொதுவாக கடனை பெறும் போது அதற்கென சில நிபந்தனைகள் இருக்கக்கூடும். ஆனால் இந்தியாவுடனான இந்த கடனுக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் எந்தவித தொடர்புமில்லை. இதனை முழுமையாக நிராகரிக்கின்றேன்.
மேலும் மாகாண சபைத்தேர்தலை இந்த வருடத்தில் நடத்த முடியாது மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த திருத்தங்களை மேற்கொண்டுவந்து இந்த வருடத்தில் தேர்தலை நடத்த முடியாது. இந்த வருடம் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உண்டு என்றும் அமைச்சர் கூறினார்.