மாவீரர் தினத்தில் நடக்கப்போவது என்ன?

0 253

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழின தாயக விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களின் வாரத்தை, நவம்பர் 21 தொடக்கம் 27 வரை நினைவிருத்தும் வகையில் “வடக்குக் கிழக்குத் தழிழர் தாயகமெங்கும் நவம்பர் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணியொலி எழுப்பி வரலாற்றைக் கடத்துவது அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 திகதி வரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான வாரமாகும். அக்காலப்பகுதி தமிழ் மக்களின் விடிவுக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாட்களாகும்.

இந்நாட்கள் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து மறைக்கப்படமுடியாததும், திசைதிருப்பப்பட முடியாததுமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும்.

இனவிடுதலை நோக்கிய, ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதன் பின்னணியையும், தமிழ் மக்கள் ஆயுதமேந்தியதன் நியாயத் தன்மைகளையும், அதிலிருந்த தியாகங்களையும், அடுத்த சந்ததியினரும் தேடிப்பார்க்கக்கூடியவாறு வரலாற்றுக் கடத்திகளாகவும் இருக்கக் கூடிய நாட்களாகும்.

இந்நாட்கள் இறந்தவர்களை நினைவுகூருகின்ற சாதாரண நாட்களுமல்ல. தமிழின விடுதலைக்காக வித்தாகிப்போன வீரமறவர்கள், தமிழர் தாயகக் கனவோடு துயில்கொள்வதாகக் கருதி, தமிழினத்தின் விடுதலை இலக்கு திசை மாறாமல் செல்ல, தமிழத் தேச மக்கள் சபதம் செய்யும், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆணிவேரான நாட்களாகும்.

எனவே இறந்தவர்களை நினைவு கூருவது என்கின்ற சொல்லாடல் ஊடாகவும், வேறுநாட்களைக் குறிப்பிட்டும், சாதாரண மரணங்களோடு, தமிழின விடுதலைக்காக வித்தாகிப் போனவர்களின் தியாகங்களையும் இணைத்து, வட கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் மதிப்பீடு செய்து பொதுமைப்படுத்துவதென்பது, மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், தமிழ்த் தேசிய தாகம் கொண்டவர்களிடத்தில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்திய செயற்பாடாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

தமிழ்த் தேசிய அரசியலுக்காக தம்மைத் தியாகம் செய்த ஆயர்கள், குருக்களை உருவாக்கித் தந்த கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களாக நவம்பர் 20ஆம் திகதியை பொதுமைப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முடிவு ஆரோக்கியமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கெடுபிடிகள் நிறைந்த சிறிலங்கா அரச இயந்திரத்தால், மாவீரர்களை நினைவுகூர்வதற்கு பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்த முற்படும் வேளையில், தமிழின தாயக விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களின் வாரத்தை, நவம்பர் 21-27 திகதிவரை நினைவிருத்தும் வகையில், வடக்குக் கிழக்குத் தழிழர் தாயகமெங்கும் நவம்பர் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணியொலி எழுப்பி வரலாற்றைக் கடத்துவதுமே வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என்பதை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

எனவே ஆயர்மன்றமானது தமது முடிவைப் பரிசீலனை செய்து அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உரிமையுடனும், பணிவன்புடனும் கேட்டுக்கொள்கின்றோம்” என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.