தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பூஜித் கூறிய பதில்!

0 204

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் கடமையைத் செய்யத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை பிரதிவாதி முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாக பூஜித் ஜயசுந்தர நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வழக்கின் ஆரம்ப சமர்ப்பணங்களை முன்வைக்க முறைப்பாடு சார்பில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் ்திகதி உயிர்த்த ஞாயிறு சஹ்ரான் ஹசீமின் தலைமைத்துவத்திலான தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பினால் நாட்டில் 08 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தாக்குதல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றிருந்த போதும் இலங்கைக் குடியரசின் பொலிஸ் மா அதிபராகச் செயற்பட்டு அதனைத் தடுக்கும் கடமையை அலட்சியமாகப் புறக்கணித்ததன் மூலம் இலங்கை தண்டனைச் சட்டத்தின் 102ஆவது பிரிவின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்..

பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக 2019 ஆம் ஆண்டும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறையான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி, பிரதிவாதிக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களும், 1,215 சாட்சிகள் முன்னிலையாகியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.

பின்னர் மேலதிக விசாரணைக்காக வழக்கு நாளை தினம் (23) வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.