மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்
குறித்த நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாவீரர் நாளை அனுஷ்டிப்பது தொடர்பாக இலங்கை அரசு பொலிஸார் மூலமும் படையினர் மூலமும் நீதிமன்றங்களை அணுகி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் பின்னணியிலேயே தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூற முற்படுகின்றார் எனக் கூறி எங்கள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள். சில நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து இருக்கின்றன.
மாவீரர் நினைவு தினங்கள் இடம்பெறும் துயிலுமில்லங்கள் தற்போது இராணுவ முற்றுகைக்குள் காணப்படுகின்றது. தீருவில் பொதுப் பூங்காவில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியை வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவரிடம் கேட்டிருக்கின்றோம். அந்த அனுமதி கிடைத்தவுடன் சுகாதாரத் துறையின் அனுமதியுடன் நவம்பர் 27 ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.
குறிப்பாக அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் இதில் மௌனமாக இருக்காது துணிந்து பொது இடங்களிலும் ஆலயங்களிலும் அஞ்சலியை செய்ய முன்வர வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்களை வைக்காமல் மாவீரர்களின் நினைவேந்தல் செய்வதை யாரும் தடுக்க முடியாது.
குறித்த 6.05 நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும் என்றார்.