ஒமைக்ரோன் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

0 457

 

 

மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அலட்சியம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை ஒமிக்ரோன் உணர்த்தியுள்ளது.

கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரோன் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரோன் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர்.

கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸின் புதிய வேரியன்ட் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மருத்துவ பெயர் B.1.1.529 என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இப்படி பொதுவாக அழைக்க முடியாது என்பதால் இதற்கு ஒமிக்ரோன் என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. ஒமிக்ரோன் என்பது கிரேக்க எழுத்துக்களில் ஒன்றாகும். ஆல்ஃபா, பீட்டா, காமா என தொடங்கும் கிரேக்க எழுத்துக்களில், 15- வது எழுத்தாக ஒமிக்ரோன் (Oo) வருகிறது.

தமிழில் இதனை ஒமிக்ரோன் என்று சிலர் அழைத்தாலும், ஒமைக்ரோன் என்பதுதான் சரியானதாக இருக்கும். முன்னதாக இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு மருத்துவ பெயராக B.1.617.2 என்பது மருத்துவப் பெயர். இப்படி அழைப்பதில் சிரமங்கள் இருக்கும் என்பதால், அதனை டெல்டா என்று அறிவியலாளர்கள் அழைத்தனர். டெல்டா என்பது கிரேக்க எழுத்துக்களில் வரும் 4-வது எழுத்தாகும்.

முந்தைய வகைகளை விட அதிக ஸ்பைக் புரோடீன்களை ஒமைக்ரோன் வைரஸ் கொண்டுள்ளதால், எளிதாக மனித செல்களுக்குள் புகுந்து விட முடியும். இவை மற்ற வேரியன்ட்களை விட அதிக வீரியம் கொண்டவை என்று அறிவியலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம்தான் ஒமைக்ரோன் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அவை என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அதிகமுறை உருமாற்றம் அடைவதால் இவை நிச்சயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் வைத்தியர். மரியா வான் கெர்கோ கூறியுள்ளார்.

ஒமைக்ரோன் வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் வழக்கத்திற்கு மாறானதாக இருக்காது என்று தென்னாப்பிரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிலபேரிடம் அறிகுறிகளே இல்லாமல் ஒமைக்ரோன் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி மருந்தை 40 சதவீதம் செயலிழக்க வைக்கும் சக்தி, ஒமைக்ரோன் வைரசுக்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான் உலக நாடுகள், பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றின் மூலம், ஒமைக்ரோன் பரவலை குறைக்க முடியும் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், மாலவி, லெசோதோ, செஷல்ஸ் ஆகிய நாடுகளில் ஒமைக்ரோன் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக இங்கிருந்து வரும் விமானங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலும் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஒமைக்ரோன் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் இருந்து வந்த 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அலட்சியம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை ஒமைக்ரான் உணர்த்தியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.