பூஸ்டர் தேவையை உணர்த்தும் ஒமிக்ரோன் – புதிய தகவல்!
கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் மிக வேகமாகப் பரவியுள்ளது. உருமாறிய ஒமிக்ரோன் கொரோனா குறித்து உலகின் பல்வேறு விஞ்ஞானிகளும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஒமிக்ரோனுக்கு எதிராக தங்களின் தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய ஃபைசர் நிறுவனம் ஆய்வு நடத்திவருகிறது. இந்நிலையில், சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவை ஒப்பிடுகையில் ஒமிக்ரோனுக்கு எதிரான தடுப்பூசியின் செயல் திறன் 25 மடங்கு குறைவு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு, கூடுதலாக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளும் போது அவர்களின் தடுப்பாற்றல் அதிகரிக்க செய்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது 2 தவணை தடுப்பூசி என்பது ஒமிக்ரோனுக்கு எதிராகப் போராட பொதுவான எதிர்ப்பு ஆற்றலை அளிக்கவில்லை என்றும் பூஸ்டர் டோஸ் கட்டாயம் போட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பைசர் நிறுவனத்தின் தலைமை அறிவியல் அலுவலர் மைக்கேல் டோல்ஸ்டன் கூறுகையில், “ஒமிக்ரோனுக்கு எதிராகப் போராட 3 டோஸ் தடுப்பூசி தேவைப்படும். 3 ஆம் டோஸ் போடுவதன் மூலம் உடலில் ஆன்டிபாடிகள் அதிகரிக்கும். இது வைரஸூக்கு எதிராக சில மாதங்கள் வரை குறைந்தபட்சம் தாக்குப்பிடிக்கும். இந்த இடைவெளியில் புதிய தடுப்பூசி தேவைப்பட்டால் அதை உருவாக்கிக் கொள்ள முடியும்” என்றார்.
ஒமிக்ரோன் ஒப்பீட்டளவில் லேசான பாதிப்புகளையே ஏற்படுத்துவதாக தற்போது வரை வெளியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதேபோல வேறு ஆய்வாளர்கள் நடத்திய ஆய்விலும் தடுப்பூசியின் தடுப்பாற்றல் 40 சதவிகிதம் வரை குறையலாம் எனக் கூறப்பட்டுள்ளது.