தமிழர்களுக்கு சோறு மட்டும் போதும் என இழிவுபடுத்திய அமைச்சர் – ப.சத்தியலிங்கம் கண்டனம்..
தமிழர்களுக்கு மூன்று வேளை உணவு மாத்தி்ரம் போதும் என அமைச்சர் பிரசன்ன
ரணதுங்க தெரிவித்த கருத்துக்கு தமிழரசுக்கட்சியின் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தெரிவித்துள்ள ப.சத்தியலிங்கம் தமிழர்கள் மூன்று வேளை உணவினை மாத்திரமே விரும்புவதாக அமைச்சர் பிரசன்னரணதுங்க தெரிவித்துள்ளார்.
இக் கருத்தானது கண்டணத்திற்குரியதுடன், பொறுப்பற்ற ஒரு கருத்தாகவே பார்க்க முடியும்.
ஒரு நாட்டின் முக்கிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவர் இப்படியான எதேச்சிகாரமான கருத்துக்களை கூறி தமிழ் மக்களை கிள்ளுக்கீரையாக அடையாளப்படுத்த முற்படுகின்றார்.
ஆளும் அரசாங்கத்தை சேர்ந் அமைச்சர்கள் இனவாத நோக்குடன் இப்படியான வன்மம்
மிகுந்த கருத்துக்களை கூறி வரும் நிலை அண்மைய நாட்களாக தொடர்ந்து நீடித்து
வருகின்றது.
தமிழ்மக்களை எரிச்சலூட்டும் இப்படியான கருத்துக்களை தெரிவிப்பதை அவர்கள் உடனடியாக நிறுத்திகொள்ள வேண்டும்.
தமிழர்களும் இந்த நாட்டு மக்களே என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
போர் முடிந்து பத்து ஆண்டுக்கள் கழிந்திருக்கும் நிலையில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் எவையும் தீர்க்கப்படவில்லை.
காணிகள் விடுவிக்கப்படவில்லை, அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படவில்லை, காணாமல்
போனவர்களின் பிரச்சனை தீர்க்கப்படவில்லை, இவற்றைவிட தமிழர்களின் நீண்டகால
கோரிக்கையான இனப்பிரச்சனைக்கு நீதியான தீர்வு வழங்கப்படவில்லை.
நிலமை இவ்வாறு இருக்கையில் தமிழ் மக்களின் விருப்பங்களையும், அவாவினையும் மழுங்கடிக்கும் விதமாக தெற்கை சேர்ந்த அரசியல்வாதிகள் இவ்வாறான கருத்துக்களை கூறி
வருகின்றமையானது பௌத்த மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகவே பார்க்க முடியும்.
இதேவேளை இவ்வாறான கருத்துக்களை அவர்கள் தெரிவிக்கும் போது தமிழ் மக்களை
பிரதிநிதித்துவப்படுத்தும் அரசின் பங்காளிகட்சிகளை சேர்ந்தோர் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள்.
மக்கள் இவர்களையும் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் தமிழரசுக்கட்சியின் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்..