முடிவுக்கு வருகிறதா? ப.சத்யலிங்கத்தின் அரசியல் பயணம்.
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக வைத்திய அதிகாரியாக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் செயலாளருமான ப. சத்தியலிங்கம் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சத்தியலிங்கம் அரசியலில் இருந்து ஓயவு பெறுவாரா என கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாத்திற்கு வெற்றிடமாக காணப்பட்ட வைத்திய அதிகாரி பதவிக்கு ப. சத்தியலிங்கமும் விண்ணப்பித்திருந்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இதற்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்ற நிலையில் நேர்முகத்தேர்வின் போது குறித்த பதவி கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவீர்களா?
முன்பு சுகாதார அமைச்சராக இருந்தீர்கள் எதிர்வரும் காலத்தில் முதலமைச்சராவதற்கு எத்தணிப்பீர்களா என கேட்கப்பட்டுள்ளது.
இதன்போது ப. சத்தியலிங்கத்தினால் அவ்வாறான எண்ணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பதவிக்கான நியமனம் ப. சத்தியலிங்கத்திற்கே கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இவ்விடயம் தொடர்பில் அவரிடம் வினவியபோது
நீண்ட நாட்களுக்கு முன்னர் நேர்முகத்தேர்வுக்கு சென்றிருந்தேன். தற்போது நியமனம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எனினும் எவ்விதமான கடிதமோ தொலைபேசி மூலமான தகவலோ எனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்.