கூட்டமைப்புக்குள் உக்கிரமடையும் மோதல்கள் – பதவி விலகினார் சிறிதரன்..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள விரிசல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.
பங்காளிக் கட்சிகளிடையேயான கருத்து முரண்பாட்டின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொறடா பதவியில் இருந்து இம்மாதம் 10 ஆம் திகதி முதல், தான் விலகி விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவி்துள்ளார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் விலகியுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்துச் செய்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனிடம் தொடர்பு கொண்டுகேட்ட போது, அவர் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 5 வருடமாக அந்தப் பதவியில் இருந்துள்ளேன். அதுமட்டுமல்லாது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கருத்தாடல்கள் ஆரோக்கியமாக இல்லை.
அவர்கள் கொறடா என்கின்ற பதவியினை வைத்து சிறீதரன் பணம் சம்பாதிப்பது போல் ஒரு மாயயை ஊடகங்களில் உருவாக்கி வருகிறார்கள்.
ஆகவே, அவ்வாறானதொரு பதவி எனக்கு தேவை இல்லை. அதனால் நான் பதவியில் இருந்து விலகிஉள்ளேன்” என்றும்,
“இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனிடம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளேன்” என்றும் தெரிவித்தார்.