மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களில் வன வள திணைக்களம் சுவீகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை..

0 35

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (18) மதியம் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம் பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம் வடக்கு மற்றும் ஜெயபுரம் தெற்கு மற்றும் மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மாதா கிராமம்,குஞ்சுக்குளம், பெரியமுறிப்பு ஆகிய கிராமங்களில் உள்ள மக்களின் பாரம்பரிய காணிகள் தற்போது வன வள திணைக்களம் சுவீகரித்து வைத்துள்ளமை தொடர்பில் பாதீக்கப்பட்ட கிராம மக்களினால் தெரிய படுத்தப்பட்டது.

குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கிளிநொச்சி ஜெயபுரம் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சந்திரபோஸ் தெரிவிக்கையில்,,

1983ஆம் ஆண்டு யூலைக்கலவரங்களின் விளைவாக மலையகப் பகுதியிலிருந்து 548 குடும்பங்கள் அகதிகளாக வெளியேறி, இடம் பெயர்ந்து இக்கிராமத்திற்கு வந்து குடியேறி வசித்து வருகின்றோம்.

இங்கு வந்த போது எங்களுக்கு 1½ ஏக்கர் மேட்டுக்காணியும் அதே போல 1 ஏக்கர் வயல்காணியும் தருவதாக அரச அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.

இருப்பினும் அதற்கான ஆவணங்கள் பின்னர் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
நாம் இக்கிராமத்தில் எமது குடும்பங்களுக்கென ஒதுக்கப்பட்டுத்தந்த மேட்டுக்காணிகளில் குடியேறியதோடு, வழங்கப்படுவதாக கூறிய வயல் காணிகளையும் துப்பரவு செய்து விவசாய செயற்பாடுகளையும் செய்து வந்தோம்.

இந்நிலையில் 1990ஆம் ஆண்டு, 1987ஆம் ஆண்டு, பிற்பாடு 2009ஆம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்தோம.

குடும்பங்கள் பயத்தின் காரணமாக இந்தியாவிற்கும் புலம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள்.

இறுதி யுத்தம் நடைபெற்ற 2008ம்ஆண்டு நாம் எமது கிராமத்தைவிட்டு முற்றுமுழுதாக இடம்பெயர்ந்து பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து இறுதியாக நலன்புரிமுகாம்களில் தங்க வைக்கப்பட்டு, 2009 கார்த்திகை மாதம் அரசாங்கத்தால் சொந்த இடத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம்.

எமது கிராமத்திற்கு மீளவர பல ஆண்டுகள் சென்றதால் எமது கிராமம் மற்றும் வயல்காணிகள் சிறுகாடுகளாகிவிட்டன.

நாங்கள் எமது கிராமத்தில் வசித்த காலத்தில், காணிக்குரிய ஆவணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் பூநகரிப் பிரதேசசெயலக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டாலும், யுத்த காலத்தின்போது பூநகரி பிரதேசசெயலகம் பெரிதாக இயங்காததால் அதிகாரிகளால் எமக்கான காணிகளின் ஆவணங்களை வழங்க முடியாது போய்விட்டது.

மேலும் இச்செயலகத்தின் ஆவணங்களும் யுத்தம் மற்றும் இடப்பெயர்வு காரணமாக இல்லாது போய்விட்டதாக அறிகின்றோம். எமது மேட்டுக்காணிகளுக்கான ஆவணங்கள் இருப்பினும் எமது வயல் காணிகள் தொடர்பிலான ஆவணங்களைப் பெறமுடியாதநிலையே காணப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது 510 குடும்பங்கள் இக்கிராமத்தில் வசித்து வருகின்றோம். எமது வயல்காணிகளை விவசாய நடவடிக்கைக்காக நாம் துப்பரவு செய்ய முற்பட்டபோது, காணிகள் காடுகளாக வளர்ந்துள்ளதால் இக்காணிகள் தமக்குரிய காணியென வனவளப்பிரிவினரால் தடுக்கப்பட்டுள்ளோம்.

பல போராட்டங்களுக்குப் பிற்பாடு தற்போது 100ஏக்கர் விவசாயக்காணிகளை மட்டும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எமது மக்களுக்கு முன்னர் வழங்குவதாக தெரிவித்த வயல்காணிகளை முழுவதுமாக விடுவிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்பான அமைச்சர் மற்றும் ஐனாதிபதி ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது வயல்களை நாங்களே செய்து எமது நாளாந்த ஜீவனோபாயத்தைக் கொண்டு செல்லுவதற்கு ஆவன செய்துதருமாறு மிகவும் தாழ்மையுடன் எமது கோரிக்கையை முன்வைக்கின்றோம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.