வவுனியாவில் வடமாகாண ஆளுநரின் உத்தரவை மீறி கிரவல் அகழ்வுப்பணிகள் முன்னெடுப்பு பிரதேச சபை உறுப்பினர் குற்றச்சாட்டு
வவுனியா சேமமடு பாடசாலைக்கு அருகில் கிரவல் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதனால் பாடசாலையை சூழவுள்ள பகுதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் பாடசாலை உள்ளக வீதியும் சேமமடு மாளிகை பிரதான வீதியும் முழுமையாக பாதிப்படைந்துள்ளது.
இதனால் மக்களின் அன்றாடப்போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. இதனைத்தடுத்து நிறுத்துமாறு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் தம்பாப்பிள்ளை சிவராசா பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,
வவுனியா சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்திற்கு அருகே சுமார் 75 மீற்றர் தூரத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான மேட்டுக் காணியிலிருந்து கனரக வாகனங்கள் ஊடாக தினமும் கிரவல் அகழ்வுப்பணிகள் கடந்த ஒருவாரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் அப்பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகள் உட்பட மாணவர்கள் பயன்படுத்தும் பாடசாலை வீதிகள் அனைத்தும் பெரும் சேதத்திற்குள்ளாகியும் வருகின்றது .
இதனால் அப்பகுதியில் வசித்த வரும் மக்களுக்கு பல்வேறு இடையூறுகளும் ஏற்பட்டு வருகின்றது.
தினமும் 30 தொடக்கம் 40 வரையான டிப்பர் வாகனத்தில் இப்பகுதியிலிருந்து அகழப்படும் கிரவல் யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன..
எனவே எமது பாடசாலை அமைந்துள்ள பகுதியில் கிரவல் அகழ்வு மேற்கொள்வதால் எதிர்காலத்தில் பெரும் ஆபத்தான அப்பகுதி மாற்றமடையும் சூழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதுடன் இதனைத்தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கையை வன்னியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் மேற்கொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண ஆளுநரின் தலைமையில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தின்போது கிரவல் அகழ்வுப்பணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் இரத்து செய்யப்படுவது குறித்தும் கிரவல் அகழ்வைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கும் வடமாகாண ஆளுநர் அறிவுறுத்தல்களையும் தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது..