இலங்கை அரசு தம்மை போராட வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது – மீனவர் கூட்டுறவு சமாசம் குற்றச்சாட்டு.
இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக பல வருடங்களை கடந்து நாங்கள் அந்த பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். இறுதியாக 2016 பேசப்பட்டு அவர்களால் முன்வைக்கப்பட்ட ஆண்டுகளும் நிறைவடைந்து இன்று அதற்காக போராட வேண்டிய நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கின்றது என மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்.எம். ஆலம் தெரிவித்தார்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் புதன் கிழமை (23) காலை மன்னாரில் ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
சம காலத்தில் வட மாகாணத்தில் குறிப்பாக மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட ‘புரெவி’ புயல் காரணமாக பாதீக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் சில கிராமங்களில் இன்னும் உரிய அதிகாரிகளும் அமைச்சக்களும் எட்டிப் பார்க்காத சூழ் நிலை காணப்படுகின்றது.
தேவன்பிட்டி தொடக்கம் மன்னார் வரையிலான பிரதேசங்கள் முழுமையாக பட்ற்தொழில் பிரதேசமாக காணப்படுகின்றது. குறித்த பிரதேசங்களில் கடற்கரையோர பிரதேசங்களில் பாதீப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
கடல் நீர் உட்புகுந்து உள்ளது. மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட மீன் பிடி உபகரணங்கள் , படகுகள் படகு வெளி இணைப்பு இயந்திரங்கள் வலைகள், கொட்டுவாடிகள் என்பன சேதமடைந்துள்ளது.சிறிய அளவில் தொழில் செய்து வந்த மீனவர்கள் பெரிய அளவிலான பாதிப்புக்கு புரொவி புயல் புரட்டிப் போட்டுள்ளது.
-இவ்வாறான பாதீப்புக்களை உரிய நேரத்தில் உரிய அதிகாரிகள் சென்று பார்வையிடும் போது தான் அந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும் அல்லது தங்களை கவனிக்க ஒரு அதிகார மட்டத்தில் ஆட்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை ஏற்படும்.
ஆனால் இன்று வரை பல இடங்களில் பாதீக்கப்பட்ட அந்த மக்களை சென்று பார்க்காத நிலையை அங்குள்ள மக்களின் ஒவ்வொரு கருத்துக்களை சென்று கேட்கும் போது நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது.
தேவன் பிட்டி, மூன்றாம் பிட்டி, விடத்தல் தீவு,பாப்பாமோட்டை, இலுப்பக்கடவை, அந்தோணியார் புரம் போன்ற கிராமங்களும் மன்னார் நகர பகுதிக்குள் பேசாலை தொடக்கம் காட்டாஸ்பத்திரி ,எருக்கலம்பிட்டி , புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களிலும் கடல் நீர் உட் புகுந்ததால் மீனவர்களின் மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டு மீன்பிடி உபகரணங்களும் அழிவடைந்து உள்ளது.
இன்று அதற்கான கொடுப்பனவு கிடைக்குமா? என்பதற்கு அப்பால் தங்களை பார்வையிட்டு தங்களுக்கு ஆதரவை தெரிவிக்க கூட யாரும் வரவில்லை என்று அந்த மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
மாவட்ட மீனவர் சார்பாக நாங்கள் பல விடயங்களை பல நேரங்களில் தெரிவித்திருக்கின்றோம். சமீபத்தில் அரச அதிபரை சந்தித்த போதும் இந்த கருத்துக்களை நாங்கள் முன் வைத்தோம்.
மீன் பிடி சம்பந்தமாக எடுத்துக் கொண்டால் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக பல வருடங்களை கடந்து நாங்கள் அந்த பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். 10 வருடங்களுக்கு மேற்பட்ட பிரச்சினையாக இன்று காணப்படுகின்றது.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல விட்டுக் கொடுப்புக்கள் இடம் பெற்றது. இறுதியாக 2016 பேசப்பட்டு அவர்களால் முன்வைக்கப்பட்ட ஆண்டுகளும் நிறைவடைந்து இன்று அதற்காக போராட வேண்டிய நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கின்றது.
சட்டங்கள் உருவாக்கப்பட்டு அது வெறும் பேப்பர் வடிவில் இருக்கின்றது. அதை நடை முறைப்படுத்த அரசு தயங்குகிறது.
ஒரு செல்வந்த நாட்டிற்கு அல்லது சிறிய நாடு ஒரு செல்வந்த நாட்டிற்கு பயப்பிடுகின்றதா? என்ற கேள்வியை கூட கேட்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
குறிப்பாக வளங்களை பொறுத்த மட்டில் மீன்பிடியோடு கரையோரங்களும் இன்று பல தேசியக் கம்பனிகளினால் சூறையாடப்படுகின்றன கனிய வளம் என்ற அந்த மணல் அகழ்வின் போது வளங்கள் சூறையாடப்படுகின்றது.
மன்னார் மாவட்டம் தாழ்ந்த நிலையில் இருக்கின்றது.கடல் நீர் நிலத்தினுள் புகும் சூழலில் மன்னாரில் இருந்து மணல் அகழ்வு நடை பெறுமாக இருந்தால் இந்த நகரம் முற்று முழுதாக கடலின் சீற்றத்துக்கு உள்ளாகி கடல் நீர் உட்புகும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் இவ்விடையத்தில் கவனம் செலுத்தி மீனவ சமூகத்தின் வாழ்விற்காக உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து நம்பிக்கையை மீனவ சமூகத்திடம் ஏற்படுத்துமாறு கேட்டு நிற்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் அவர்களும் கலந்துகொண்டு கருத்துக்களை முன் வைத்தார்.