தனிமைப்படுத்தலில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் – செல்வம் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உலருணவுப்பபொதிகள் வழங்கப்படாமை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இன்று அவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியாவின் உள்ள திருநாவல்குளம், மகாரம்பைக்குளம், ஸ்ரீநகர், கற்குழி மற்றும் தேக்கவத்தை ஆகிய கிராமங்களில் கொவிட் -19 தொற்றுநோயால் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் குழந்தைகள், சிறுவர்கள், கற்பிணித் தாய்மார்கள், வயதுமுதிர்ந்தவர்கள், இளைஞர்கள், யுவதிகள் உள்ளடங்கியுள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட இந்த ஏழை மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய ரூபா 5000 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இன்னும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
தற்போது இந்த மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலைக்கு ஆளாகி காணப்படுகிறார்கள். எனவே இந்த நபர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய ரூபா 5000 பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.