P2P – சுமந்திரன், சாணக்கியன், கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலரை கைதுசெய்ய தயாராகும் பொலிஸார்?.
நீதிமன்ற உத்தரவை மீறி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்ற 500ற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் என பலரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், ஆர்.சாணக்கியன், எஸ்.ஶ்ரீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.கஜேந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் மணிவண்ணன், எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஶ்ரீகாந்தா உள்ளிட்டோரும் அடங்குவதாக கூறப்படுகின்றது.
கொரோன பரவலுக்கு மத்தியில் தோயற்சியாக, 5 நாட்கள் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு சுமார் 15 நீதிமன்ற தடை விதித்திருந்தன.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை பொருட்படுத்தாது பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வீடியோ காணொளிகளின் ஊடாக, நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை மீறியமை, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதற்காக பொலிஸ் மாஅதிபர் மற்றும் பொலிஸ் சட்டப்பிரிவு ஆகியோரின் உதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடக்கு கிழக்கில் தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு, வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறிய பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம், மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.