குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சிவலிங்கம் அநுராதபுர தூபியின் முடிப் பகுதி – வெடித்தது புதிய சர்ச்சை.

0 383

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வு பணியின் போது மீட்கப்பட்ட ஆதி சிவலிங்கம் என கூறப்படும் தொல்பொருள் சிதைவு அநுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுர விக்கரமநாயக்க தனது முகநூலில் இந்த கருத்தை பதிவேற்றியுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அநுராதபுர காலத்து 01ஆம், 02ஆம் நூற்றாண்டு காலத்திற்குரிய பாரிய தூபியின் 6 மீற்றர் நீளம் கொண்ட முடி பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தொல்பொருள் சிதைவு உண்மையாக எந்த காலகட்டத்துக்கு சொந்தமானது என இன்னும் ஒரு வாரத்துக்குள் கூறப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு என்ற இடத்தில் குருந்தூர் மலை எனப்படும் இந்த பகுதி காணப்படுகின்றது.

குருந்தூர் மலை எனப்படும் தமிழர்களின் பூர்விகமான இந்த பகுதியை பௌத்த மரபுரிமை என தெரிவித்து அண்மையில் பெரும் சர்ச்சை ஒன்று கிளம்பி இருந்தது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த எல்லாவல மேதானந்த எனப்படும் தேரர் ஒருவர்.

“குருந்தகம” என்பதே தற்போது குறுந்தூர்மலை எனப்படுகின்றது. இதனை எம்மால் நிரூபிக்க முடியும்.

அத்துடன் வடகிழக்கில் காணப்படும் தொல்பொருள் முக்கியத்துவமுடைய பல ஸ்தானங்களில் 99 வீதமானவை பௌத்த மறப்புரிமைகளுடன் தொடர்புட்டவை என சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டர்.

இதனை அடுத்து தமிழர்களின் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கடந்த 18.1.2021 அன்று அகழ்வாராச்சி ஆரம்பமானது.

இந்த பணிகள் தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இராணுவத்தினரையும் கொண்ட அகழ்வாராச்சியாளர்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குருந்தூர்மலைப் பகுதியில் இடம்பெறும் அகழ்வாராச்சி பணிகளின் போது ஆதி சிவனுடைய லிங்க சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டது.

ஏற்கனவே குறித்த குருந்தூர் மலை பகுதியிலே லிங்க வழிபாடுகள் இடம்பெற்றதாக தெரிவித்து தமிழர்களால் அப்பகுதியில் ஆதி சிவன் ஆலயம் அமைக்கப்பட்டு வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.

இதனை நிரூபிக்கும் வகையிலேயே ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சிதைவு அமைந்திருந்தது.

இதன் மூலம் குறுந்தூர் மலை பகுதி தமிழர்களுக்கு சொந்தமானது என இயற்கையே சாட்ச்சியளித்ததாக கருதப்படும் இந்த நிலையில் தான் அமைச்சர் விதுர விக்கரமநாயக்கவின் இந்த பதிவு வெளிவந்துள்ளது.

அமைச்சரின் இந்த கருத்தானது பேரின வாத பௌத்தாதிக்க சக்திகளால் தமிழர்களை மேலும் மேலும் கோவத்துக்கு உள்ளாக்கி மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்குவதாக அமைந்துள்ளது என்றே கருத முடிகின்றது.

தொகுப்பு – ம.டெஸ்மன்

Leave A Reply

Your email address will not be published.