பரவலை காரணம் காட்டி அடிப்படை சுதந்திரம் குற்றமாக்கப்படுகிறது – ஐ.நா பொதுச் செயலாளர்.

0 93

மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

அதுவே அனைவருக்கும் சமத்துவமானதும் கண்ணியமானதுமான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழி எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது.

இந்த நிலையில் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தனது முதலாவது உரையை நிகழ்த்திய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

மனித உரிமைகள் மிகவும் முக்கியமானவை என்பதுடன் அவை எம்மை பிறருடன் சம அளவில் இணைக்கின்றது.

மனித உரிமைகள் தான் நாம் வாழ்வதற்கான வழியாகும். அதனூடாகவே தேவையற்ற பதற்றங்களைத் தணிக்க முடிவதுடன் நிலைபேறான அமைதியையும் அடைந்துகொள்ள முடியும்.

மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்குவதே சமத்துவமானதும் கண்ணியமானதுமான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழி.

உலகளாவிய ரீதியில் காணப்படும் மனித உரிமைகள் தொடர்பான சவால்களை முழு வீச்சில் கையாள்வதற்கான ஒரு கட்டமைப்பாக மனித உரிமைகள் பேரவை விளங்குகின்றது.

அதன்படி மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான செயற்திட்டம் ஒன்றுக்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன்.

கடந்த வருடம் கூட்டத்தொடருக்காக்க நாம் ஒன்றிணைந்து சில நாட்களிலேயே, கொரோனா வைரஸ் முழு உலகத்தையும் தாக்கியது.

எனினும் அந்தத் தொற்றுநோய் குடும்பங்களுக்கு இடையிலான தொடர்பையும் மனித உரிமைகளின் முழுமையான பரிமாணத்தையும் வெளிப்படுத்தியது.

அதேவேளை பிரிவினைகள், இயலாமை, சமத்துவமின்மை, மனித உரிமைகளில் தளர்வுகள் உள்ளிட்ட புதிய சவால்களையும் கொவிட் – 19 வைரஸ் பரவல் தோற்றுவித்தது.

பல தசாப்தகாலங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக மிக மோசமான வறுமை உலகநாடுகளைப் பாதித்திருக்கின்றது.

சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாமலும், வரையறுக்கப்பட்ட வளங்களினாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றின் தொடர்ச்சியாக அண்மைக்காலத்தில் அவதானிக்கப்பட்ட விடயம் யாதெனின், தடுப்பூசி ஏற்றும் பணிகளில் சமத்துவம் இல்லாதமை.

அதற்கமைய உலகளாவிய ரீதியில் சுமார் 130 நாடுகளுக்கு இன்னமும் ஒரு தடுப்புமருந்து கூடக் கிடைக்கவில்லை.

தடுப்பூசி ஏற்றுவதில் சமத்துவம் பேணப்படுவதென்பது மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்தும். எனினும் தடுப்பூசி வழங்கலில் கடைப்பிடிக்கப்படும் தேசியவாதம் அதனை மறுத்துள்ளது.

கொவிட் – 19 தடுப்பூசி என்பது உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் பொதுவானதாகவும் அனைவராலும் கொள்வனவு செய்யக்கூடிய வகையிலும் இருக்கவேண்டும்.

இந்த வைரஸ் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதுடன் சிவில் சமூக இடைவெளியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சில நாடுகள் வைரஸ் பரவலை காரணம் காட்டி அடிப்படை சுதந்திரத்தை குற்றமாக்கல் சுயாதீன செய்தி அறிக்கையிடலைத் தடைசெய்தல் அரச சார்பற்ற அமைப்புகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளன.

அரசுகள் தொற்று நெருக்கடியைக் கையாளும் முறை குறித்து மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் என பலர் விமர்சனங்களை வெளியிட்டனர்.

ஆனால் அவர்கள் அடக்குமுறைகளுக்கு உள்ளத்துடன் தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலும் தகவல்கள் பதிவாகியுள்ளன.

தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்ட வரையறைகள் தேர்தல் நடைமுறைகளை மட்டுப்படுத்துவதற்கு எதிர்த்தரப்பின் குரலைப் பலவீனப்படுத்த என பயன்படுத்தப்பட்டுள்ளது..

இந்த நிலையில் தற்போது அடிப்படைவாதம், அடக்குமுறைக்கு உள்ளாக்கல், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்தும் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

அதேவேளை நாஸிசவாதம், வெள்ளையின மேலாதிக்கம், இன அடிப்படையில் தூண்டப்பட்ட தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டிய அவசியம் உண்டு.

உலகளாவிய ரீதியில் சிறுபான்மையின சமூகங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

எனவே அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

சிறுபான்மை சமூகங்கள்தான் ஒரு சமூகத்தின் பல்வகைமைத் தன்மைக்குக் காரணமாக அமைகின்றன.

எனவே அனைத்து சமூகத்தினரதும் மத மற்றும் பாரம்பரிய ரீதியிலான தனித்துவத்தை பாதுகாக்கவும் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் ஏற்புடைய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

அண்மைக்காலமாக ஜனநாயகக் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டு, தன்னிச்சையான கைது , சிவில் சமூக இடைவெளி வரையறுப்பு, சிவில் சமூக அமைப்புக்கள் மீது தாக்குதல்கள், சிறுபான்மையினம் மீதான மீறல்கள் என உலகம் முழுதும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன.

எனவே நாம் அனைவரும் மனித உரிமைகளைப் பாதுகாத்து ஒருமித்து செயற்படுவதன் ஊடாக இவற்றை மாற்றியமைக்க முடியும் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.