காணாமல் போனோரின் உறவுகளின் தீச்சட்டி போராட்டம் ஆரம்பம்.
கிளிநொச்சியில் கொட்டும் மழைக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் தீச்சட்டி போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இந்த நிலையிலேயே குறித்த தீச்சட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகியுள்ள பேரணி , ஏ9 வீதி ஊடக பயணித்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நிறைவடையவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், தமக்கான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்காகவும் தமது வலிகளை சர்வதேசத்துக்கு எடுத்தியம்பும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, சர்வதேசமே பதில் சொல், வேண்டும் வேண்டும் உறவுகள் வேண்டும் என்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.