தோட்டவெளி பிரதேசத்தில் சட்ட விரோத கல் அரிவு – உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு!

0 309

மன்னார் தோட்டவெளி பிரதேசத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவந்த சட்ட விரோத மண் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அப் பகுதியில் மீண்டும் சட்ட விரோதமாக ஜாட் அமைத்து கல் அரிந்து விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவரவதாவது.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் தோட்டவெளி கிராமம் அமைந்துள்ளது.

குறித்த கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் அண்மைக் காலமாக காடுகள் அழிக்கப்பட்டு மண் அகழ்வு இடம்பெற்றுவந்தது.

இந்த நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் குறித்த பகுதியில் மண் அகழ்வது தடை செய்யப்பட்டிருந்தது.

எனினும் குறித்த காட்டுப்பகுதியில் தற்போது இரண்டு ஜாட் அமைக்கப்பட்டு மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு கல் அரிந்து வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் நடவடிக்கை இடம் பெற்று வருவதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு, ஜாட் அமைக்கப்பட்டு குழாய்க்கிணறு அமைக்கப்பட்டு கல் அரியும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.

இயந்திரங்கள் மற்றும் வேலைக்கு ஆட்களை வைத்து சட்ட விரோதமான முறையில் பாரிய கிடங்குகள் தோண்டப்பட்டு மண் அகழ்வு செய்யப்பட்டு அவ்விடத்திலேயே கல் அரிந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதாக தெரிய வருகின்றது.

எவ்வித அனுமதியும் இன்றி சட்ட விரோதமான முறையில் கல் அரியும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக தெரிய வருகின்றது.

குறித்த கிராமத்தில் கடந்த காலங்களில் பாரிய அளவில் மணல் மண் அகழ்வு செய்யப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரால் ஏற்றிச் செல்லப்பட்டதனை தேட்டவெளி பிரதேசத்தில் உள்ள மாதர் சங்க பிரதி நிதிகள் ஒன்று திரண்டு முற்றுகையிட்டு உயர் மட்டங்களுக்கு தெரியப்படுத்தி குறித்த நடவடிக்கையினை நிறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தோட்ட வெளி கிராமத்துக்கு அயலில் உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த நபர்களினால் மணல் ஏற்றும் இடத்தில் கல் அரிந்து பாரிய அளவில் கல் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தோட்ட வெளி கிராம அபிவிருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடையம் தொடர்பாக தோட்டவெளி கிராம அபிவிருத்தி சங்கம் தோட்டவெளி கிராம அலுவலகருக்கு தெரியப்படுத்தியதோடு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் பிரதேச செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதோடு, உடனடியாக குறித்த சட்ட விரோத செயற்பாட்டை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.