மன்னார் மாவட்டத்தில் எதிர் வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 351 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ் நிலையினை கருத்தில் கொண்டு எதிர் வரும் இரண்டு வாரங்களுக்குள் மன்னார் மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன் கிழமை(28) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
மன்னார் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் தற்போது வரை 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த வருடத்தில் 334 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 351 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டாலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ் நிலையினை கருத்தில் கொண்டு எதிர் வரும் இரண்டு வாரங்களுக்குள் மன்னார் மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது.
எனவே மக்கள் சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாக சமைய வழிபாட்டு இடங்கள்,பொது இடங்களில் அதிகமாக மக்கள் கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்கான வழிகாட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் மாத்திரமே மக்கள் கலந்து கொள்ள வேண்டும்.
அணைத்து இடங்களிலும் சுகாதார துறையினரோ அல்லது பொலிஸாரோ கடமையினை மேற்கொள்வது கடினம்.
எனவே மக்களுக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்கின்றவர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
உரிய கட்டுப்பாடுகளுடன் செயற்படும் பட்சத்தில் எதிர் வரும் இரண்டு வாரங்களில் ஏற்படும் பாதீப்பை தவிர்த்துக் கொள்ள முடியும்.
தற்போது இலங்கையின் சில இடங்களில் பரவி வருகின்ற கொரோனா தொற்றானது காற்று மூலமாக பரவும் என கூறப்படுகின்றது.
காற்று மூலமாக ஒரு வைரஸ் பரவும் என கூறப்பட்டால் குறித்த வைரஸ் தனது இயல்பை திரிவடைந்து பெற்றிருக்கலாம்.
அல்லது சமூகத்தில் அந்த வைரசின் செரிவு அதிகரித்து காணப்படும்.
மன்னார் மாவட்டத்தை பொறுத்தவகையில் கடந்த ஜனவரி மாதம் அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், காற்றினால் பரவும் தொற்று இனம் காணப்படவில்லை.
ஆனால் தற்போது காற்றினால் பரவும் தொற்று நாட்டின் சில இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்த நிலமை மன்னார் மாவட்டத்திலும் ஏற்பட்டால் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படத்தவது கடினமாக இருக்கும்.
மேலும் ஆக்சிஜன் தேவையான நோயளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து செல்கின்றது. இரண்டாவது அலை உருவான போது ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் இருந்து வேறுபட்ட பிரச்சினையாக காணப்படுகின்றது.
நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் வைத்தியசாலைகளில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே குறித்த நிலமையை கருத்தில் கொண்டு மக்கள் மிகவும் அவதானமாக செயல்பட்டு மூன்றாவது அலையில் இருந்து உங்களை தற்பாதுகாத்து கொள்வதற்கு நடவடிக்கைளை மேற்கொண்டு எமக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
மேலும் ஜனவரி மாதம் இறுதி பகுதியில் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் குறிப்பாக சுகாதார துறையினருக்கு 2 ஆவது கட்ட தடுப்பூசி நாளை வியாழக்கிழமை தொடக்கம் செலுத்தப்படும்.
முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்;டவர்களுக்கு மாத்திரமே 2 ஆவது தடுப்பூசி செலுத்தப்படும்.
எதிர் வரும் மாதம் அளவில் நாட்டிற்கு தடுப்பூசிகள் கிடைக்குமிடத்தில் ஏனையவர்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும்.என அவர் மேலும் தெரிவித்தார்.