மாந்தை மேற்கு பிரதேச சபையை மீண்டும் கைப்பற்றியது – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி..
மாந்தை மேற்கு பிரதேச சபையினை மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.
மாந்தை மேற்கு பிரதேச ச சபையின் தலைவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த நிலையில் புதிய தலைவருக்கான தெரிவு வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இன்று புதன் கிழமை (19) காலை 10.30 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் தெரிவுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சி சார்பாக விக்கினராசா கயிலைநாதன் ஆகிய இருவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில் சபையின் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் பகிரங்க வாக்களிப்பு இடம் பெற்றது.
24 உறுப்பினர்களைக் கொண்ட மாந்தை மேற்கு பிரதேச சபையில் தலைவர் தெரிவிற்கான வாக்களிப்பின் போது 2 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. மேலும் ஒரு உறுப்பினர் நடு நிலை வகித்தார்.
ஏனைய 19 உறுப்பினர்களும் பகிரங்க வாக்களிப்பை மேற்கொண்டனர்.
இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் 12 வாக்குகளையும், தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சி சார்பாக போட்டியிட்ட விக்கினராசா கயிலைநாதன் 9 வாக்குகளையும் பெற்ற நிலையில் மேலதிக 3 வாக்குகளினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் வெற்றி பெற்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
புதிய தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 1 உறுப்பினரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 1 உறுப்பினருமாக 12 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் 2 ஆவது தடவையாக மாந்தை மேற்கு பிரதேச சபையினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.