இத்தாலி வாழ் இலங்கையர்களுடன் பிரதமர் சந்திப்பு
இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று போலோக்னா நகரில் நேற்று (14) இடம்பெற்றது.
இத்தாலியின் பல்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்திருந்த இலங்கை பிரதிநிதிகள், பிரதமரை சந்தித்து விரிவாக கலந்துரையாடினர்.
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும் இவ்வாறு இத்தாலிக்கு விஜயம் செய்து இத்தாலியில் வாழும் இலங்கை மக்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை குறித்து இலங்கை பிரதிநிதிகள் இதன்போது பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.
பிரதமர் ஜனாதிபதியாகவிருந்த காலப்பகுதியில் இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட இருதரப்பு நட்பு காரணமாக இதுவரை இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொடர்பிலும் அங்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
மிலான் நகரில் இலங்கை கொன்சியூலர் அலுவலகம் அமைப்பதற்கு அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட தொலைநோக்கு செயற்பாடு காரணமாக பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதில் இலங்கையர்கள் பலரது காலமும் பணமும் மிச்சப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் காணப்படும் இத்தாலியிலுள்ள இலங்கை மக்களுக்கு இருபது ஆண்டு சேவை காலத்தின் பின்னர் அந்நாட்டில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தருமாறு அங்கு வருகைத்தந்திருந்த பிரதிநிதிகள் பிரதமரிடம் கேட்டுக் கொண்டனர்.
இதுதொடர்பாக இத்தாலி அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசை அச்சந்தர்ப்பத்திலேயே அறிவுறுத்தினார்.
ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் எதிர்வரும் சில தினங்கள் அங்கு தங்கியிருந்து இராஜதந்திர சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளார்.
இந்த சந்திப்பில் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இத்தாலிக்கான பதில் இலங்கை தூதுவர் சிசிர செனவிரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)