நாட்டின் சொத்துக்களை விற்கும் போட்டி வைத்தால் அரசாங்கமே வெல்லும்
நாட்டு சொத்துக்களை விற்கும் போட்டி வைத்தால் அதில் இந்த அரசாங்கத்திற்கு அனைத்து பரிசில்களும் கிடைக்குமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
லிந்துலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மலையகத்தின் மாற்றம் என்பது கல்வியில் தங்கியுள்ளது அதனால் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம் குறிப்பாக அவர்களுக்கான ஆரம்பக்கல்வியை முறையானதாக அமைய வேண்டும் அதற்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு.
அதனால் நாங்கள் சிரமம் பாராது தனிப்பட்ட முறையில் எனும் முடிந்தளவு எமது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான உதவிகளை செய்து வருகிறோம். அதில் ஒரு அங்கமாகவே இன்று இந்த அறநெறி பாடசாலை கட்டிடம் திறந்து வைக்கப்படுகிறது இந்த அறநெறி பாடசாலை என் கட்டிடத்தின் ஊடாக மாணவர்கள் முடிந்தளவு நலம்பெற வேண்டும் என்பதோடு இந்த கட்டிடத்தின் உடைய செயற்பாடுகள் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி அபிவிருத்தி எனும் போது ஆசிரியர்கள் அதிபர்கள் தவிர்க்க முடியாதவர்களாக இருக்கின்றனர் மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குவதற்கு முதலில் அவர்களுக்கு கல்வியைப் புகட்டும் ஆசிரியர்களின் மனங்களை நாங்கள் திருப்திப்படுத்த வேண்டும்.
அதனால் இந்த அரசாங்கம் உடனடியாக ஆசிரியை அதிபர்களின் உடைய சம்பள முரண்பாடு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காண்பதாக அறிவித்துள்ள போதிலும் ஆசிரியர்கள் அதிபர்கள் அதன் மீது நம்பிக்கை கொள்ளவில்லை அதற்கு காரணம் இந்த அரசாங்கம் சொன்ன எதையுமே செய்யவில்லை என்பதாகும் தேர்தல் காலத்தில் கூறியதுபோல அல்ல இந்த அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் அனைத்தும் வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்டு முற்றுமுழுதாக நாட்டுக்கு எதிரானதாக அமைந்துள்ளது.
நாட்டினுடைய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்க மாட்டோம் என்று கூறியவர்கள் இன்று பெறுமதிமிக்க சொத்துக்களை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளனர். கொழும்பு துறைமுகத்தில் அதேபோன்று கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தில் கொழும்பு துறைமுகத்தை அண்டியுள்ள முக்கிய இடங்களில் அரசாங்கம் கை வைத்துள்ளது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து செய்துள்ள மிகப்பெரிய சாதனை என்னவென்றால் நாட்டினுடைய பெறுமதியான சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பதாகும். சொத்துக்களை விற்பனை செய்யும் போட்டி ஒன்று வைத்தால் இந்த அரசாங்கத்தை யாராலும் நெருங்க முடியாது. அதற்காக வழங்கப்படும் அனைத்து பரிசுகளையும் இந்த அரசாங்கமே தட்டிச் செல்லும் அந்த அளவு சொத்துக்களை விற்பதில் பெயர் போன அரசாங்கமாக இது மாறியுள்ளது.
அதேபோன்று அமைச்சுப்பதவி எடுத்து எவ்வித வேலைகளும் செய்யாமல் வெறும் வாய்ச்சொல்லில் மாத்திரம் அமைச்சு எது என்பதை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கினால் நிச்சயமாக அது மலையகத்திற்கு வந்து சேரும். காரணம் ராஜாங்க அமைச்சு ஒன்றை பெற்றுக் கொண்டு அப்படி ஒரு அமைச்சு இருக்கிறதா இல்லையா என்பது கூட தெரியாத அளவு மலையகத்தில் வேலைத்திட்டங்கள் மந்தகதியில் சென்று கொண்டிருக்கின்றன என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.