உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தினால் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிரிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு திட்டமிடல், உதவி வழங்குதல், பலத்த காயங்களுக்கு உட்படுத்தல் ஆகிய 23,270 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நௌபர் மௌலவி, சஜீட் மௌலவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பே, அலியஸ் கௌபர், மொஹமட் சனஸ் தீன் மற்றும் மொஹமட் ரிஸ்வான் உட்பட 25 பேருக்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.