முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைப்பு விவகாரம்! பிரித்தானிய நாடாளுமன்றில் எதிரொலி..
யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் உலகளாவிய ரீதியில் அந்த உடைப்பு சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஸ்ரீலங்காவுக்கு எதிரான வலுவான நடவடிக்கைக்கான தீர்மானமொன்றின் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளதாக பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் வலியுறுத்தியுள்ளார்.
எனவே எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக வலுவானதொரு தீர்மானத்தை பிரித்தானிய அரசு கொண்டு வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அந்நாட்டு நாடாளுமன்ற அமர்வில் இதனை வலியுறுத்திய பேசிய காணாளியினை தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மனித உரிமை மீறல்கள் மற்றும் இறுதிக்கட்ட போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் உட்பட மனித உரிமைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பில் ராஜபக்க்ஷ சகோதரர்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாக்கும் வகையில் பிரித்தானிய அரசு ஜெனிவாவில் செயற்பட வேண்டும்.
ஆகவே ஸ்ரீலங்கா விடயத்தில் புதிய தீர்மானமொன்றிக்கான உறுதிப்பாட்டை பிரித்தானிய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
அந்த தீர்மானத்தில் ஸ்ரீலங்காவை கண்காணிக்கும் அலுவலகத்தை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் ஸ்தாபித்தல் என்ற விடயம் அமையப்பெற்று ஒரு சிறப்பு பொறிமுறை கொண்டுவரப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.